நெல்லை டவுனில் பாதாள சாக்கடை குழியில் சைக்கிளுடன் விழுந்த வாலிபர்

நெல்லை டவுனில் பாதாள சாக்கடை குழியில் சைக்கிளில் சென்ற வாலிபர் தவறி விழும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2021-04-14 19:02 GMT
நெல்லை:
நெல்லை டவுனில் பாதாள சாக்கடை குழியில் சைக்கிளில் சென்ற வாலிபர் தவறி விழும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாதாள சாக்கடை

நெல்லை மாநகராட்சி சார்பில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதியாக பாதாள சாக்கடை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நெல்லை டவுன் பகுதிகளான மேட்டு தெரு, வ.உ.சி தெரு, மாடத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அமைப்பதற்கான குழிகள் தோண்டப்பட்டு உள்ளது. அந்த குழிகளை அடையாளப்படுத்தும் வகையில் சுற்றி பிளாஸ்டிக் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த குழிகளின் அருகில் உள்ள சிறிய வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. மேலும் ஒரு சில தெருக்களில் சைக்கிள், மோட்டார் சைக்கிள்களும் இந்த வழியாகவே சென்று வருகின்றன.

குழிக்குள் விழுந்த வாலிபர்

அந்த வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் அவ்வப்போது தடுமாறி குழிக்குள் விழுந்து காயம் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் டவுன் மேட்டு தெரு பகுதியில் அபிராம்புரம் தெருவில் தோண்டப்பட்டிருந்த ஒரு பாதாள சாக்கடை குழியில் சைக்கிளில் மந்திரமூர்த்தி என்ற வாலிபர் தவறி பாதாள சாக்கடை குழியில் விழுந்தார். 

சைக்கிளுடன் விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அவர் பாதாள சாக்கடை குழிக்குள் விழும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. தற்போது அந்த காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உத்தரவுபடி தனியார் கட்டுமான நிறுவனத்தினர் உடனடியாக அந்த குழியை மூடி சீரமைத்தனர்.

மேலும் செய்திகள்