கறம்பக்குடி சந்தையில் நாட்டுக்கோழிகள் விலை கிடுகிடு உயர்வு
தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு கறம்பக்குடி சந்தையில் நாட்டுக்கோழிகள் விலை கிடு கிடு வென உயர்ந்தது.
கறம்பக்குடி:
கோழி விற்பனை
தமிழ்ப் புத்தாண்டில் பெரும்பாலான வீடுகளில் அசைவ உணவுகள் சமைப்பது வழக்கம். நேற்று வருடப்பிறப்பை முன்னிட்டு கறம்பக்குடி பகுதியில் ஆட்டுக்கறி, கோழி, மீன் போன்றவை விற்பனை அமோகமாக நடைபெற்றது. கறம்பக்குடியில் புதன்கிழமைதோறும் வாரச்சந்தை நடைபெறும். இங்கு நடைபெறும் கோழிச் சந்தை பிரபலம். இதனால் கோழிகளை வாங்க, விற்க என ஏராளமானோர் கறம்பக்குடி சந்தைக்கு வந்து செல்வர். நேற்று தமிழ் வருடப்பிறப்பு என்பதால் நாட்டு கோழிகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. கடந்த வாரம் ஒரு கிலோ பெட்டை கோழி ரூ.400-க்கு விற்பனையானது. ஆனால் நேற்றைய சந்தையில் ரூ.500 முதல் ரூ.550 வரை விலைபோனது. இதேபோல் சேவல் ஒரு கிலோ ரூ.450 வரை விற்பனையானது.
விவசாயிகள் மகிழ்ச்சி
நாட்டு கோழிகள் வரத்து குறைவாக இருந்ததால் நேரம் அதிகரிக்க, அதிகரிக்க விலையும் கூடியது. பொதுமக்கள் கோழிகளை போட்டிபோட்டுக்கொண்டு வாங்கி சென்றனர். இதனால் நாட்டு கோழிகளை விற்பனை செய்யவந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து நாட்டு கோழிகளை விற்க வந்த பெண் விவசாயி ஒருவர் கூறுகையில், தமிழ்வருட பிறப்பையொட்டி கோழிகள் நல்ல விலைபோனாது. வெளியூர்களில் இருந்து வந்த வியாபாரிகள் சிலர் சந்தைக்கு வரும் வழியிலேயே நின்றுகொண்டு கோழிகளை குறைந்த விலைக்கு வாங்கி பின்னர் சந்தையில் அதிக விலைக்கு விற்றனர். கோழிகளை விற்க வருபவர்கள் சந்தை நிலவரத்தை தெரிந்துகொள்ள முடியாமல் இடைத்தரகர்கள் தடுத்துவிடுகின்றனர். கோழி வளர்ப்பவர்களுக்கு கிடைக்கும் லாபத்தைவிட இடைத்தரகர்களே அதிகம் காசு பார்க்கின்றனர். எனவே சந்தைக்கு ஒதுக்கப்பட்ட இடத்திலேயே கோழி விற்பனை செய்ய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். என கூறினார்.
வடகாடு
வடகாடு பகுதிகளில் நாட்டுக்கோழி விற்பனை மும்முரமாக நடந்தது. வடகாடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்களது வீடுகளில் வளர்க்கப்படும் சேவல் மற்றும் கோழிகளை தமிழ் வருடப்பிறப்பு தினமான நேற்று விற்பனை செய்வதற்காக கொண்டு வந்திருந்தனர். வெளியூர்களில் இருந்து வந்திருந்த கோழி வியாபாரிகள் சேவல் ரூ.300 மற்றும் ரூ.400 என்ற விலையிலும் கோழி ரூ.500 முதல் ரூ.600 என்ற விலைகளில் பொதுமக்களிடம் பேரம் பேசி வாங்கி சென்றனர்.