வால்பாறையில் கொரோனா விதிகளை காற்றில் பறக்கவிட்ட சுற்றுலா பயணிகள்

வால்பாறையில் கொரோனா விதிகளை காற்றில் பறக்கவிட்ட சுற்றுலா பயணிகள் முகக்கவசம் இன்றி உலா வருவதால் உள்ளூர் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Update: 2021-04-14 17:42 GMT
வால்பாறை

வால்பாறையில் கொரோனா விதிகளை காற்றில் பறக்கவிட்ட சுற்றுலா பயணிகள் முகக்கவசம் இன்றி உலா வருவதால் உள்ளூர் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

வால்பாறை 

மலைப்பிரதேசமான வால்பாறையில் தற்போது மழை பெய்து உள்ளதால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர் நிலவுகிறது. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

தற்போது கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால், வெளியே செல்லும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 
\
முகக்கவசம் அணிவது இல்லை 

ஆனால் சுற்றுலா மையமான வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளில் பலர் முகக்கவசம் அணிவது இல்லை. அதுபோன்று அவர்கள் சமூக இடைவெளியையும் கடைபிடிப்பது இல்லை. மேலும் இங்கு இருக்கும் வியாபாரிகளும் அதை கடைபிடிப்பது இல்லை. 

இதன் காரணமாக வால்பாறையில் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே இதை அதிகாரிகள் கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

இது குறித்து பொதுமக்கள் மேலும் கூறியதாவது:-

கொரோனா பரவ வாய்ப்பு 

தற்போது வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கொரோனா விதிகளை காற்றில் பறக்கவிட்டு முகக்கவசம் அணியாமல் உலா வருவதால், இங்கு கொரோனா அதிகளவில் பரவ வாய்ப்பு உள்ளது. 

ஆனால் அதை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதால், பாதிப்பு எங்களுக்குதான். வால்பாறை நகர் பகுதியில் வாகனங்களில் வருபவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்து, முகக்கவசம் அணியவில்லை என்றால் அபராதம் விதிக்கிறார்கள்.

தனிக்குழு அமைக்க வேண்டும் 

ஆனால் சுற்றுலா மையங்களில் யாரும் சோதனை செய்வது இல்லை. கூட்டம் கூட்டமாக வரும் சுற்றுலா பயணிகள் சமூக இடைவெளியையும் கடைபிடிக்காமல் இருக்கிறார்கள். 

எனவே வால்பாறையில் கொரோனா பரவலை தடுக்க சுற்றுலா பயணிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கையை கடைபிடிக்கிறார்களா என்பதை கண்காணிக்க தனிக்குழு அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்றனர்

மேலும் செய்திகள்