நீத்தார் நினைவு நாள் அனுசரிப்பு
தேனி மாவட்டத்தில் தீயணைப்பு நிலையங்களில் நீத்தார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. பணியின் போது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.;
தேனி:
நீத்தார் நினைவு நாள்
தீயணைப்பு பணி மற்றும் மீட்பு பணியின் போது உயிரிழந்த தீயணைப்பு படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அவர்களின் வீர மரணத்தை போற்றும் வகையிலும் தீயணைப்பு துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 14-ந்தேதி நீத்தார் நினைவு நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி தேனி மாவட்டத்தில் உள்ள 8 தீயணைப்பு நிலையங்களிலும் நீத்தார் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.
அதன்படி தேனி தீயணைப்பு நிலையத்தில் நீத்தார் நினைவு நாள் நிகழ்ச்சி நடந்தது.
இதற்காக தீயணைப்பு நிலையத்தின் முன்பு நீத்தார் நினைவுத்தூண் அமைக்கப்பட்டது.
அதற்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் கல்யாணகுமார், மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் குமரேசன், தீயணைப்பு நிலைய அலுவலர் மனோகரன் ஆகியோர் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
பணியின் போது உயிரிழந்த தீயணைப்பு படை வீரர்களின் பெயர் விவரங்கள் வாசிக்கப்பட்டது. பின்னர் தீயணைப்பு படை வீரர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.
தீத்தொண்டு வாரம்
அதுபோல், போடி தீயணைப்பு நிலையத்தில் நீத்தார் நினைவு நாள் நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையில் மலர் வளையம் வைத்து அனுசரிக்கப்பட்டது.
பெரியகுளம் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனிச்சாமி தலைமையில் நீத்தார் நினைவு நாள் நிகழ்ச்சி நடந்தது.
நீத்தார் நினைவு தூணுக்கு மலர் தூவி, மவுன அஞ்சலி செலுத்தினர். மாவட்டத்தில் உள்ள மற்ற தீயணைப்பு நிலையங்களிலும் இந்த நிகழ்ச்சி நடந்தது.
மேலும், நீத்தார் நினைவு நாளையொட்டி தீயணைப்பு துறை சார்பில் தீத்தொண்டு வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
அதன்படி நேற்று தீத்தொண்டு வாரம் நிகழ்ச்சிகள் தொடங்கியது. வருகிற 20-ந் தேதி வரை இது கடைபிடிக்கப்படுகிறது.
இந்த நாட்களில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் கொரோனா பரவல் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் தீயணைப்பு படைவீரர்கள் ஈடுபட உள்ளனர்.