கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த கனமழை
கொடைக்கானலில் நேற்று சுமார் 2 மணி நேரம் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அங்குள்ள அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.;
கொடைக்கானல்:
கொடைக்கானல் பகுதியில் தற்போது குளு, குளு சீசன் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் கடந்த சில நாட்களாக கொடைக்கானலில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று காலையில் கொடைக்கானலில் வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகமாக இருந்தது. ஆனாலும் குளிரான காற்று வீசியதால் வெப்பத்தின் தாக்கம் சுற்றுலா பயணிகளுக்கு அவ்வளவாக தெரியவில்லை. இந்த நிலையில் மாலையில் வானில் கருமேக கூட்டங்கள் திரண்டு மாலை 4.30 மணி அளவில் நகரின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
சுமார் 3 மணி நேரம் கொட்டி தீர்த்த மழையால் வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் அருவி, பியர் சோலா அருவி உள்ளிட்டவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் நட்சத்திர ஏரிக்கும் நீர்வரத்து அதிகரித்தது. கொட்டும் மழையில் சுற்றுலா பயணிகள் சுற்றுலா இடங்களை பார்வையிட்டனர். இதனிடையே பலத்த மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் மழை காரணமாக பாறாங்கற்கள் உருண்டு ரோட்டில் விழுந்ததால் சுற்றுலா பயணிகள் வாகனங்களை இயக்க முடியாமல் சிரமப்பட்டனர். மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பழனியில் நேற்று இரவு 7 மணி அளவில் சாரல் மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் இந்த மழை நீடித்தது.