முககவசம் அணியாத வாலிபரை போலீசார் தாக்கியதாக புகார்
தேனியில் முககவசம் அணியாத வாலிபரை போலீசார் தாக்கியதாக வந்த புகாரை தொடர்ந்து தாசில்தார் விசாரணை நடத்தினார்.
தேனி:
தேனி பழைய பஸ் நிலையத்தில் முக கவசம் அணியாதவர்களுக்கு போலீசார் நேற்று அபராதம் விதித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது பஸ் நிலைய வளாகத்தில் உள்ள பூ மார்க்கெட்டுக்கு பள்ளப்பட்டியை சேர்ந்த 25 வயது வாலிபர் தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் வந்தார்.
அப்போது அந்த வாலிபர் முக கவசம் அணியாததால் போலீசார் அபராதம் விதிக்க முயன்றனர்.
அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் அந்த வாலிபரை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது.
பின்னர் அந்த வாலிபரை தேனி போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
முக கவசம் அணியாததால் போலீசார் தாக்கியதாக மாவட்ட கலெக்டருக்கு அந்த வாலிபரின் தரப்பினர் தொலைபேசி மூலம் புகார் தெரிவித்தனர்.
அதன்பேரில் விசாரணை நடத்த தேனி தாசில்தாருக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டார்.
உடனடியாக தாசில்தார் தேவதாஸ் தலைமையில் வருவாய்த்துறையினர் தேனி போலீஸ் நிலையத்துக்கு வந்தனர்.
சம்பந்தப்பட்ட வாலிபர், அவருடைய தந்தை மற்றும் போலீசாரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையை தொடர்ந்து அந்த வாலிபர் போலீஸ் நிலையத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டார்.
விசாரணை குறித்த விவரம் கலெக்டருக்கு சமர்ப்பிக்கப்படும் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியது.