தமிழ் புத்தாண்டையொட்டி பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
தமிழ் புத்தாண்டையொட்டி பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
பழனி:
தமிழ் புத்தாண்டையொட்டி பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
பக்தர்கள் குவிந்தனர்
தமிழ் புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜை நடைபெற்றது. அதன்படி, அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. கோவிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடந்தது. தொடர்ந்து 4.30 மணிக்கு விளாபூஜை நடந்தது. அதைத்தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலில் குவிந்தனர். இதனால் சன்னதி வீதி, கிரிவீதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
ஆன்லைன் முன்பதிவு
கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதுதவிர அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, கிருமிநாசினி வழங்கப்பட்டது.
தற்போது கோடைகாலம் என்பதால் பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டு இருந்தன. அதேபோல் கிரிவீதி, கோவில் வெளிப்பிரகாரத்தில் நிழற்பந்தல், கயிற்றால் ஆன விரிப்புகள் போடப்பட்டிருந்தன. அவற்றில் அவ்வப்போது கோவில் ஊழியர்கள் தண்ணீர் தெளித்து, வெப்பத்தை தணித்தனர்.
வெள்ளிக்கவசம்
இதேபோல் திருஆவினன்குடி, மலைக்கோவிலில் உள்ள பாதவிநாயகர், ஆனந்த விநாயகர் சன்னதிகளில் தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மலைக்கோவில் ஆனந்தவிநாயகர் சன்னதியில் வெள்ளிக்கவச அலங்காரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மலைக்கோவிலுக்கு செல்ல முடியாத பக்தர்கள் சிலர் அடிவாரத்தில் உள்ள கோவிலில் தேங்காய் உடைத்து வழிபட்டனர்.