லாரி சிறைபிடிப்பு
மடத்துக்குளம் அருகே நரசிங்கபுரம் பகுதியில் மருத்துவக் கழிவுகளை கொட்ட வந்த லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.;
மடத்துக்குளம்
மடத்துக்குளம் அருகே நரசிங்கபுரம் பகுதியில் மருத்துவக் கழிவுகளை கொட்ட வந்த லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
மருத்துவக்கழிவுகள்
மடத்துக்குளம் அருகே உள்ள மைவாடி நரசிங்கபுரம் கருப்புச்சாமி புதூர் எல்லை அமைந்துள்ளது. இந்த எல்லைப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் இந்த எல்லைப்பகுதியில் நேற்று உடுமலையில் இருந்து வந்த சில லாரிகளில் இருந்து மருத்துவ கழிவுகளை இப்பகுதியில் கொட்டி விட்டு சென்று விட்டனர். மீண்டும் இரவு 7 மணிக்கு மருத்துவக்கழிவுகளை கொட்டுவதற்காக, லாரி நரசிங்கபுரம்-கருப்புசாமி புதூர் எல்லை பகுதிக்கு வந்தடைந்தது. அப்போது ஏற்கனவே 5 லாரிக்கும் மேற்பட்ட மருத்துவ கழிவுகளை நரசிங்கபுரம்-கருப்புசாமி புதூர் எல்லைப்பகுதியில் கொட்டப்பட்டுள்ளதை அறிந்த பொதுமக்கள் ஆத்திம் அடைந்தனர்.
லாரி சிறைபிடிப்பு
பின்னர் அப்பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டனர். பின்னர் அங்கு மீண்டும் மருத்துவ கழிவுகளை கொட்ட வந்த லாரியை பொதுமக்கள் சிறை பிடித்தனர். பின்னர் லாரியின் டிரைவரை கீழே இறக்கிவிட்டு, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் மடத்துக்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, இது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் லாரி டிரைவர் நவாப் கூறுகையில் லாரியில் ஏற்றப்பட்டுள்ள கழிவுகள் குறித்த விவரம் எனக்கு எதுவும் தெரியாது.
ஆனால் லாரியில் உள்ள கழிவுகள் விவசாயத்திற்கு பயன்படும் உரம் எனவும், இதனை உடுமலையில் இருந்து ஏற்றி வந்து, நரசிங்காபுரம் எல்லைப்பகுதிகளில் கொட்ட வேண்டும் எனக்கூறித்தான் என்னை அனுப்பி வைத்தனர். கழிவுகளை ஏற்றி இங்கு அனுப்பி வைத்த கழிவுகளின் உரிமையாளர் தொலைபேசி எண் தருகிறேன், நீங்களே பேசிக் கொள்ளுங்கள். இதுகுறித்த மற்ற விவரங்கள் எனக்கு தெரியாது என்றார்.
முற்றுகை
இதனால் டிரைவரின் பேச்சில் சமாதானம் அடையாத பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர். பின்னர் மருத்துவ கழிவு ஏற்றி வந்த லாரி, எங்கும் சென்று விடாமல் இருக்க, லாரியின் அனைத்து டயர்களில் உள்ள காற்றை பிடுங்கி விட்டனர். மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஏற்கனவே கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகளை முற்றிலுமாக திருப்பி எடுத்துச் செல்லுங்கள். அதுவரை லாரியை இங்கிருந்து விடமாட்டோம் என கூறி லாரி முன்பு நின்று கொண்டு முற்றுகையிட்டனர்.
பின்னர் இரவு 8 மணிக்கு மேலும், தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து செல்லவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட கழிவுகளை கொட்டுவதற்காக அனுப்பிய கழிவுகளின் உரிமையாளர் யார் எனவும் மருத்துவ கழிவுகளை கொட்டுவதற்கு அனுமதி வழங்கியது யார் எனவும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
---
நரசிங்காபுரம் பகுதியின் எல்லையில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகளையும்,பொதுமக்கள் சிறைபிடித்த லாரியையும் படத்தில் காணலாம்.
---