தூத்துக்குடி அருகே இளம்பெண் காரில் கடத்தல் 3 பேர் கைது
தூத்துக்குடி அருகே இளம்பெண்ணை காரில் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி அருகே இளம்பெண்ணை காரில் கடத்திய கேபிள் டிவி உரிமையாளர் உள்பட 3 பேரை போலீசார் கைதுசெய்தனர்.
ஒருதலைக்காதல்
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகிலுள்ள முக்காணியை சேர்ந்தவர் முருகன். ஏரல் பகுதியில் கேபிள் டிவி நடத்தி வருகிறார். இவர், தூத்துக்குடி அருகே முத்தையாபுரத்தில் தனியார் கடையில் வேலைபார்த்து வந்த இளம்பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் வேலை முடிந்து இரவு 9 மணி அளவில் அந்த இளம்பெண் கடையில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்துள்ளார்.
அந்த வழியில் இருளில் காருடன் முருகன் மற்றும் அவரது நண்பர்களான முக்காணியை சேர்ந்த கார் டிரைவர் மாரிசெந்தில், பால் வியாபாரி மலையாண்டி ஆகியோர் நின்று கொண்டிருந்துள்ளனர்.
காரில் கடத்தல்
திடீரென்று அந்த 3 பேரும் இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கோவில்பட்டி நோக்கி கடத்தி சென்றுள்ளனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில், பெண்ணின் தாயார் முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சதீஸ் மற்றும் போலீசார் உள்ளடக்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கோவில்பட்டி நோக்கி சென்ற காரை பின் தொடர்ந்து சென்றனர். கோவில்பட்டியில் காருடன் அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.
இளம்பெண் மீட்பு
காருடன் அவர்களை முத்தையாபுரம் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து வந்தனர். கடத்தப்பட்ட இளம்பெண்ணை மீட்டு பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகன், மாரிசெந்தில், மலையாண்டி ஆகிய 3 பேரையும் கைதுசெய்தனர்.