ஊழியர்களுக்கு கொரோனா எதிரொலி: செண்பகவல்லி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

கோவில்பட்டியில் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, செண்பகவல்லி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-04-14 12:55 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், நேற்று பக்தர்கள் கோவிலுக்கு வெளியில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
பங்குனி திருவிழா
கோவில்பட்டி செண்பவல்லியம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில் பங்குனி பெருந்திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா 2-வது அலை காரணமாக 5-ம் நாள் திருவிழாவுக்கு பின்னர், கோயில் உட்பிரகாரத்தில் சுவாமி, அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளி உலா வந்தனர். இதில், பக்தர்களின்றி, மண்டகப்படிதாரர்கள் 10 பேர் மட்டும் கலந்து கொண்டனர். அதே போல், 9-ம் நாளான நேற்று முன்தினம் தேரோட்டமும் ரத்து செய்யப்பட்டது.
தீர்த்தவாரி
10-ம் நாளான நேற்று தமிழ் புத்தாண்டு ‌ தினம் மற்றும் தீர்த்தவாரியை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. திருவனந்தல் பூஜை நடந்தது. சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. காலை 10.30 மணிக்கு செண்பகவல்லியம்மன், பூவனநாத சுவாமி ஆகியோர் தீர்த்தவாரிக்கு எழுந்தருளினார். ஓதுவார் தேவாரம் பாடி உரலில் விரளி மஞ்சள் இடிக்கப்பட்டு, சுவாமி, அம்பாளுக்கு 11.30 மணிக்கு தீர்த்தவாரி அபிஷேகம் நடந்தது. இரவு 7 மணிக்கு தீர்த்தவாரி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து 8 மணிக்கு சப்தாவர்ணம் அலங்காரத்தில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி கோவில் உட்பிரகாரத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 12 மணிக்கு மேல் கொடி இறக்கப்பட்டது. 
கோவிலுக்கு வெளியில் நின்று...
கோவில் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, தற்போது சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இதை தொடர்ந்து கோவில் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. கடந்த 2 நாட்களாக கோவிலுக்குள் பக்தர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. 
இதன் தொடர்ச்சியாக நேற்றும் கோவிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதை தொடர்ந்து  சமூக இடைவெளியுடன் கோவிலுக்கு வெளியே நின்று சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்