அம்பேத்கர் வழியில் தமிழக மக்களுக்கு திமுக நிச்சயம் கடமையாற்றும் - மு.க.ஸ்டாலின்
அண்ணல் அம்பேத்கர் வழியில் தமிழக மக்களுக்கு திமுக நிச்சயம் கடையாற்றும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
'சட்ட மேதை' அம்பேத்கர் 1891-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி பிறந்தார். சடட் வல்லுநராக, பொருளாதார நிபுணராக, அரசியல் மேதையாக தன்னை நிரூபித்தார். 1990-ல் அவருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டது.
அம்பேத்கரின் 130-வது பிறந்தநாள் இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், இயக்கங்களும் அம்பேத்கர் சிலைகளுக்கு ஆங்காங்கே மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் பலரும் அம்பேத்கரின் சமூக பங்களிப்பை நினைவூட்டி வருகின்றனர்.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
"அம்பேத்கருக்கு திமுக சார்பில் எங்களின் வீரவணக்கத்தை செலுத்தியிருக்கிறோம். இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படுவதற்கு காரணமாக இருந்தவர் அம்பேத்கர். தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட மாபெரும் தலைவர். அவருடைய வழிநின்று, திமுக தன் கடமையை உறுதியாக, நிச்சயமாக நிறைவேற்றும்.
இவ்வாறு அவர் கூறினார்.