பூந்தமல்லி அருகே கன்டெய்னர் லாரியில் கடத்தி வந்த 1¼ டன் குட்கா பறிமுதல் - 2 பேர் கைது
பூந்தமல்லி அருகே கன்டெய்னர் லாரியில் கடத்தி வந்த 1¼ டன் குட்காவை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் உள்பட 2 பேரை கைது செய்தனர்.;
பூந்தமல்லி,
பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி கன்டெய்னர் லாரிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருளான குட்காவை மூட்டை, மூட்டையாக கடத்தி வந்து கடைகளில் விற்கப்படுவதாக பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பூந்தமல்லி அருகே சந்தேகத்திற்கிடமாக வந்த மினி கன்டெய்னர் லாரியை மடக்கி சோதனை செய்தபோது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் மூட்டை, மூட்டையாக இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து லாரியில் இருந்த லாரி டிரைவர் கவுதம் ராஜ் மற்றும் உடன் வந்த ராமநாதன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். அதில், அவர்கள் கர்நாடக மாநிலத்திலிருந்து கன்டெய்னர் லாரிகளில் மொத்தமாக குட்காவை கொண்டு எடுத்து வந்து பூந்தமல்லி அருகே வேறு வாகனத்திற்கு மாற்றி கடைகளுக்கு விற்பது தெரியவந்தது.
இதையடுத்து, இவர்களிடமிருந்து 1¼ டன் குட்கா மற்றும் மினி கன்டெய்னர் லாரி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து தொடர்ந்து இருவரிடமும் விசாரணை செய்து வருகின்றனர்.