வியாசர்பாடியில் திருநங்கை தீக்குளித்து தற்கொலை

வியாசர்பாடியில் திருநங்கை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2021-04-14 01:33 GMT
பெரம்பூர், 

சென்னை வியாசர்பாடி சி.கல்யாணபுரம் 6-வது தெருவை சேர்ந்தவர் நாகப்பன். இவரது மனைவி ராஜ கலா. இந்த தம்பதியருக்கு சூர்யா (வயது 29) என்ற மகன் உள்ளார். இந்தநிலையில் சூர்யா கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருநங்கையாக மாறி லாரா என்ற பெயர் சூட்டிக் கொண்டு தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

லாராவுக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி வந்து பெற்றோரிடம் குடிக்க பணம் கேட்டு தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வீட்டில் இருந்த லாரா, திடீரென உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதையடுத்து, லாராவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து அவரை மீட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த லாரா நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல், சென்னை அம்பத்தூர் ஞானமூர்த்தி நகரை சேர்ந்தவர் கணேசன் (39). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த கணேசனுக்கு கடன் தொல்லை இருந்து வந்ததால், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான கணேசன் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த அம்பத்தூர் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்