பவானி அருகே மீண்டும் சம்பவம் மர்ம விலங்கு கடித்து 12 ஆடுகள் பலி- பொதுமக்கள் பீதி

பவானி அருகே மர்ம விலங்கு கடித்ததில் 12 ஆடுகள் இறந்தன. தொடரும் இந்த சம்பவங்களால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

Update: 2021-04-13 22:57 GMT
பவானி
பவானி அருகே மர்ம விலங்கு கடித்ததில் 12 ஆடுகள் இறந்தன. தொடரும் இந்த சம்பவங்களால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
மர்ம விலங்கு
பவானி அருகே உள்ள ஜம்பை நல்லிபாளையம் பகுதியில்  கடந்த சில தினங்களுக்கு முன்பு பட்டியில் புகுந்த மர்ம விலங்குகள், 7 ஆடுகளை கடித்து குதறி ெகான்றுள்ளன. 
இதன் பரபரப்பு அடங்குவதற்குள் பவானி பகுதியில் மீண்டும் அதேபோல் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
12 ஆடுகள் சாவு
பவானி ஜம்பை அருகே உள்ள துருசாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பூரணம். இவர் ஆட்டு வியாபாரம் செய்து வருகிறார். அதற்காக இவர் 20-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு ஆடுகளை ஓட்டிச்சென்றுவிட்டு வழக்கம்போல் இரவில் பட்டியில் அடைத்து வைத்திருந்தார். நேற்று காலை 6 மணி அளவில் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்ல பூரணம் பட்டிக்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு 12 ஆடுகள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
 நேற்று முன்தினம் இரவு பட்டிக்குள் புகுந்த மர்ம விலங்குகள்  12 செம்மறி ஆடுகளை கடித்து குதறி கொன்றுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த கால்நடை டாக்டர்கள் கார்த்திகா (ஜம்பை), ஆறுமுகம் (செலம்பகவுண்டன்பாளையம்), அந்தியூர் வனச்சரக அலுவலர் உத்திரசாமி, வனவர் சக்திவேல், வனகாப்பாளர் கருணாகரன், சிவராஜ், பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் வடிவேல் குமார், அருண், மற்றும் ஜம்பை பேரூர் செயல் அலுவலர் சரவணன், சுகாதார ஆய்வாளர் ஆகியோர் அங்கு சென்று இறந்து கிடந்த ஆடுகளை பார்வையிட்டனர்.
இழப்பீடு வழங்க கோரிக்கை
அப்போது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அவர்களிடம் கூறும்போது, ‘பட்டிக்குள் புகுந்த மர்ம விலங்குகள் ஆடுகளை கடித்து குதறி கொன்று வருகின்றன. ஆடுகளை விற்றுதான் நாங்கள் பிழைப்பு நடத்தி வருகிறோம். தொடரும் இதுபோன்ற சம்பவங்களால் எங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
நாங்கள் வளர்த்து வரும் கோழிகளையும் மர்மவிலங்குகள் தூக்கி செல்கின்றன. இது எங்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. எனவே எங்களுக்கு இழப்பீடு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். அதற்கு வனத்துறையினர் ‘இதுகுறித்து கோபி ஆர்.டி.ஓ.விடம் தெரிவித்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.
ஓநாயா? வெறிநாயா?
நல்லிபாளையம், ஜம்பை பகுதியில் நடமாடுவது செந்நாய்? அல்லது வெறிநாயாக இருக்கலாம் என்று பொதுமக்கள் மற்றும் வனத்துறை தரப்பில் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து ஜம்பை பேரூராட்சியை சேர்ந்த 5 துப்புரவு பணியாளர்கள் கொண்ட 2  குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் அந்த பகுதியில் நடமாடுவது வெறிநாய்களா அல்லது ஓநாய்களா என கண்காணிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்