இறந்த கொரோனா நோயாளிக்கு இறப்பு சான்றிதழ் வழங்க மறுப்பு: பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் மீது போலீசில் புகார்

இறந்த கொரோனா நோயாளிக்கு இறப்பு சான்றிதழ் வழங்க மறுத்ததால் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

Update: 2021-04-13 22:56 GMT
பெருந்துறை
ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்த 35 வயது வாலிபர் ஒருவர் பெங்களூரூவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு துறை அதிகாரியாக பணியாற்றி வந்தார். கடந்த 6-ந் தேதி அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அவர் இதுகுறித்து ஈரோட்டில் உள்ள தனது 37 வயது அண்ணனுக்கு தகவல் ெதரிவித்து உள்ளார். மேலும் அவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக பெங்களூரில் இருந்து புறப்பட்டு வந்து உள்ளார். பின்னர் கடந்த 8-ந் தேதி பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாக தங்கி சிகிச்சை பெற்று வந்து உள்ளார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அதிக பணம் செலவாகும் என்பதை அறிந்ததும் மீண்டும், அவர் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வந்து உள்ளார். அப்போது வரும் வழியில் அவர் இறந்துவிட்டார். இதைத்தொடர்ந்து இறந்த கொரோனா நோயாளி உடலுடன் அவருடைய அண்ணன் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வந்து இறப்பு சான்றிதழ் கேட்டு உள்ளார். ஆனால், சிகிச்சையில் இருந்து பாதியிலேயே வெளியேறியவருக்கு, இறப்பு சான்றிதழ் வழங்க முடியாது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து கொரோனாவால் இறந்து போனவரின் அண்ணன், இதுகுறித்து பெருந்துறை போலீசில் புகார் அளித்து உள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே கொரோனாவால் இறந்தவரின் உடல் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்கில் வைக்கப்பட்டு உள்ளது.  
கொரோனாவால் இறந்தவருக்கு 25 வயதில் மனைவியும், பிறந்து 60 நாளே ஆன பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.

மேலும் செய்திகள்