தமிழ் புத்தாண்டையொட்டி ஈரோட்டில் பழங்கள் - பூஜை பொருட்கள் விற்பனை தீவிரம்

தமிழ் புத்தாண்டையொட்டி ஈரோட்டில் பழங்கள்-பூஜை பொருட்கள் விற்பனை தீவிரமாக நடந்தது.

Update: 2021-04-13 22:56 GMT
ஈரோடு
தமிழ் புத்தாண்டையொட்டி ஈரோட்டில் பழங்கள்-பூஜை பொருட்கள் விற்பனை தீவிரமாக நடந்தது.
தமிழ் புத்தாண்டு
தமிழ் புத்தாண்டான சித்திரை மாதம் இன்று (புதன்கிழமை) பிறக்கிறது. இந்த தினத்தில் வீடுகள், கடைகள், அலுவலகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். இதற்காக ஈரோட்டில் நேற்று பழங்கள், பூஜை பொருட்களின் விற்பனை ஜோராக நடந்தது.
ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் நேதாஜி காய்கறி, பழங்கள் மார்க்கெட்டிலும், மணிக்கூண்டு பகுதியில் உள்ள பழக்கடைகளிலும் விற்பனை தீவிரமாக நடந்தது. பொதுமக்கள் பலர் ஆர்வமாக வந்து பழங்களை வாங்கி சென்றார்கள். இதேபோல் அனைத்து பகுதிகளிலும் உள்ள பழக்கடைகள், பழமுதிர்சோலைகள் உள்ளிட்ட பகுதிகளிலும் பழங்களின் விற்பனை வழக்கத்தைவிட அமோகமாக காணப்பட்டது.
விலை உயர்வு
ஈரோடு நேதாஜி மார்க்கெட்டில் நேற்று விற்பனை செய்யப்பட்ட பழங்களின் விலை விவரம் கிலோவில் வருமாறு:-
திராட்சை  ரூ.90, சாத்துக்குடி  ரூ.80, ஆரஞ்சு  ரூ.120, ஆப்பிள்  ரூ.190, சப்போட்டா  ரூ.50, மாம்பழம்  ரூ.90, கொய்யா  ரூ.60.
இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், “தமிழ் புத்தாண்டையொட்டி விலையில் பெரிதும் மாற்றம் இல்லை. அனைத்து பழங்களின் விலையும் ஒரு கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை விலை உயர்ந்து விற்பனையானது”, என்றார்.

மேலும் செய்திகள்