கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்காத தனி நபர்கள், நிறுவனங்களுக்கு ரூ.61½ லட்சம் அபராதம் மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் தகவல்
சேலம் மாநகராட்சியில் இதுவரை, கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்காத தனி நபர்கள், நிறுவனங்களுக்கு ரூ.61½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் கூறினார்.
சேலம்:
சேலம் மாநகராட்சியில் இதுவரை, கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்காத தனி நபர்கள், நிறுவனங்களுக்கு ரூ.61½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் கூறினார்.
தடுப்பு நடவடிக்கைகள்
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட லீ பஜார் வணிகர் சங்க கட்டிடத்தில் வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சேலம் மாநகராட்சி பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தீவிர தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். அதன்படி முக கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் ஆகியவை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
திருமண மண்டபங்கள்
முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வரும் தனிநபர்கள், அரசின் வழிமுறைகளை கடைபிடிக்காத நடைபாதை வியாபாரிகள், வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், உணவகங்கள், சினிமா தியேட்டர்கள், திருமண மண்டபங்கள் ஆகியவை அவ்வப்போது ஆய்வு செய்யப்படுகிறது. அதில் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை அரசு விதிமுறைகளை கடைபிடிக்காத 24 ஆயிரத்து 753 பேருக்கும், 107 நிறுவனங்களுக்கும் மொத்தம் ரூ.61 லட்சத்து 69 ஆயிரத்து 840 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. கொரோனா நோய் தொற்றின் தாக்கத்தை உணர்ந்து, பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் மிக அவசர தேவையின்றி வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது.
தடை செய்யப்பட்ட பகுதி
ஒரே பகுதியில் 3 பேருக்கு மேல் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டிருந்தால் அந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி வாய்க்கால் பட்டறை காந்தி நகர், அழகாபுரம் பார்வதி தெரு, கணக்கு பிள்ளை தெரு, செவ்வாய்ப்பேட்டை-நாராயணன் தெரு, வைத்தி தெரு, அரிசிப்பாளையம் பால் தெரு, அண்ணா பார்க் அருகே உள்ள சங்கர் நகர், மெய்யனூர் ஆலமரத்துக்காடு, சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள ஜி.ஆர். நகர், கோவிந்தம்மாள் நகர் ஆகியவை தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதே போன்று அம்மாப்பேட்டை, கிச்சிப்பாளையம், காந்தி சாலை, அன்னதானப்பட்டி, மணியனூர், கருங்கல்பட்டி, அன்னதானப்பட்டி, இரும்பாலை ஆகிய இடங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
முகாமில் மாநகர நல அலுவலர் பார்த்திபன், டாக்டர் அக்சயா, உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், சுகாதார ஆய்வாளர்கள் பிரகாஷ், சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.