அரசு அதிகாரி வீடு உள்பட 3 வீடுகளில் நகை- பணம் கொள்ளை

சுசீந்திரம் பகுதியில் அரசு அதிகாரி வீடு உள்பட 3 வீடுகளில் நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். மேலும் 2 இடங்களில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.

Update: 2021-04-13 20:28 GMT
மேலகிருஷ்ணன்புதூர்:
சுசீந்திரம் பகுதியில் அரசு அதிகாரி வீடு உள்பட 3 வீடுகளில் நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். மேலும் 2 இடங்களில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. 
ஆர்.டி.ஓ. அலுவலக சூப்பிரண்டு
சுசீந்திரம் போலீஸ் சரகம் பறக்கை சோதிரிநகரை சேர்ந்தவர் கலா (வயது57). இவர் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சூப்பிரண்டாக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களது மகளுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். இதனால் கலா தன்னுடைய வீட்டில் தனியாக வசித்து வருகிறார். 
இவர் தினமும் காலை 9 மணிக்கு வேலைக்கு சென்று விட்டு இரவில் தான் வீட்டுக்கு வருவார். வழக்கம்போல் நேற்றுமுன்தினம் காலையில் வேலைக்கு சென்றார். இரவு 9 மணியளவில் வீட்டுக்கு வந்த போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அறைகளில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு அவற்றில் இருந்த துணிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் சிதறி கிடந்தன.
நகை, பணம் கொள்ளை
 பீரோவில் இருந்த தங்க சங்கிலி, காப்புகள், கம்மல் என 18¼ பவுன் நகைகள், ரூ. 85 ஆயிரம் போன்றவை கொள்ளை போயிருந்தது. யாரோ மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து சுசீந்திரம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் காளியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை போன வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. அப்போது 3 பேரின் கை ரேகைகள் சிக்கியது. இதனால் கொள்ளை சம்பவத்தில் 3 பேர் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.
டிரைவர் வீடு
பறக்கை அருகே பொட்டல்விளையை சேர்ந்தவர் சுரேஷ் (41), டெம்போ டிரைவர். இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் தனது மகளை சகோதரி வீட்டில் விட்டிருந்தார். தனது வீட்டில் சுரேஷ் மட்டும் தனியாக வசித்து வருகிறார்.
நேற்றுமுன்தினம் காலை வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு இரவில் வீடு திரும்பினார். அப்போது வீட்டில் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ. 50 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து சுசீந்திரம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
மற்றொரு சம்பவம்
சுசீந்திரம் அருகே ஆஸ்ரமம் சாஸ்தான் கோவில் தெருவை சேர்ந்தவர் பத்மநாபன் பிள்ளை. இவர் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். நேற்றுமுன்தினம் காலையில்  வேலைக்கு சென்றுவிட்டு இரவு வீட்டுக்கு திரும்பி வந்தார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும், பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.10 ஆயிரம் கொள்ளை போயிருந்தது. 
கொள்ளை முயற்சி
சுசீந்திரம் ஆஞ்சநேயர்நகர் 9-வது தெருவை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (43). இவர் தெங்கம்புதூர் மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்றுமுன்தினம் மாலை 3.30 மணியளவில் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். பின்பு இரவில் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. 
யாரோ மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், வீட்டில் நகை, பணம் எதுவும் இல்லாததால் கொள்ளையர்கள் கையில் எதுவும் சிக்கவில்லை. 
இதுபோல், சுசீந்திரம் போலீஸ் நிலையத்திற்கு பின்புறம் ஆசாத் நகரை சேர்ந்தவர் வசந்தா (75). இவர் நேற்று முன்தினம் மாலையில் பாண்டிச்சேரிக்கு புறப்பட்டு சென்றுவிட்டார். இரவில் பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் வசந்தா வீட்டுக்கு சென்ற போது கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கதவை உடைத்து கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். ஆனால், வீட்டில் நகை, பணம் எதுவும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.
தனிப்படை அமைப்பு
இந்த சம்பவங்கள் குறித்து சுசீந்திரம் போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த 5 இடங்களிலும் ஒரே கும்பல் தான் கைவரிசை காட்டியிருப்பதாக போலீசார் கருதுகின்றனர். அதனை உறுதிப்படுத்தும் விதமாக சில தடயங்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
சுசீந்திரம் பகுதியில் ஒரே நாளில் பட்டப்பகலில் 3 வீடுகளில் கொள்ளை மற்றும் இரண்டு வீடுகளில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது அந்த பகுதி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்