கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை தென்காசி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனுஜார்ஜ் எச்சரிக்கை
கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்காசி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனுஜார்ஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.;
தென்காசி:
கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்காசி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனுஜார்ஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆலோசனை கூட்டம்
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அரசு அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
மாவட்ட கலெக்டர் சமீரன் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனுஜார்ஜ் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனுஜார்ஜ் பேசியதாவது:-
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முககவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது உள்ளிட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் மேற்படி விதிமுறைகளை மீறுவோர்களுக்கு உடனடியாக அபராதம் விதிக்க அறிவுறுத்தப்பட வேண்டும்.
கடும் நடவடிக்கை
பொது இடங்களில் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிவதையும் சமுக இடைவெளியை கடைபிடிப்பதையும் உறுதிப்படுத்திட வேண்டும். மேலும் மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாடு மையங்களை உடனடியாக செயல்படுத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.
கடைகளில் முககவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பொருட்கள் வழங்கப்படும் என அறிவிப்பு பதாகை வைக்கப்பட வேண்டும். மேலும் கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை மருத்துவத்துறையுடன் இணைந்து செயல்படுத்த சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டதுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை முறையாக பின்பற்றாத கடைகள், தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங், மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சரவணன், சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் நெடுமாறன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் அருணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டை கண்காணிப்பு அலுவலர் அனுஜார்ஜ், கலெக்டர் சமீரன் ஆகியோர் பார்வையிட்டனர்.