விபத்தில் இறந்த மூதாட்டியை தனது தாய் என்று அழுது புலம்பிய வாலிபரால் பரபரப்பு

ஜெயங்கொண்டம் அருகே விபத்தில் இறந்த மூதாட்டியை, தனது தாய் என்று கூறி அழுது புலம்பிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-04-13 19:40 GMT
ஜெயங்கொண்டம்:

மூதாட்டி பலி
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆமணக்கந்தோண்டி மெயின்ரோட்டில் நேற்று அதிகாலை அந்த வழியாக வந்த வாகனம் மோதி, சுமார் 85 வயது மதிக்கத்தக்க மூதாட்டி பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர், இறந்தது தனது தாய் என்று கூறி, அழுது புலம்பினார். போலீசார் அவரை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் அவர் சமாதானம் ஆகவில்லை. இந்நிலையில் அவரது தாய் வயலுக்கு சென்று இருந்ததாகவும், திரும்பி வீட்டிற்கு வந்துவிட்டதாகவும் அவருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, இறந்தது அவருடைய தாய் இல்லை என்பது உறுதியானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
விசாரணை
இதற்கிடையே போலீசார், இறந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து இறந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் எதற்காக இங்கு வந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்