கட்டுப்பாட்டு மண்டலங்களில் போலீஸ் பாதுகாப்பு

கொரோனா பாதித்தவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வெளிநபர்கள் செல்வதை தடுக்கும் வகையில், கட்டுப்பாட்டு மண்டலங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Update: 2021-04-13 19:36 GMT
கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரே வாரத்தில் மட்டும் மாவட்டம் முழுவதும் காய்ச்சல் முகாம் நடத்தியும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை செய்ததில் மொத்தம் 730 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் ஒரே தெருவில் 3 மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததால், அந்த பகுதி கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு வருகிறது.

கட்டுப்பாட்டு மண்டலம்

அதன்படி மாவட்டத்தில் கடலூர் எஸ்.என்.சாவடி முத்துசாமி நகர், திருப்பாதிரிப்புலியூர் திரிபுரசுந்தரி நகர், செம்மண்டலம் வ.உ.சி. தெரு ஆகியவையும், சிதம்பரம் அண்ணாமலை நகரில் கே.ஆர்.எம்.நகர், சிதம்பரம் அபிராமி அபார்ட்மெண்ட், காட்டுமன்னார்கோவிலில் கச்சேரி தெரு, ரெட்டியார் தெரு, அறந்தாங்கி ஆகிய இடங்களும், வடலூர் பேரூராட்சியில் மூர்த்தி நகர், மங்கலம்பேட்டை பேரூராட்சியில் தென்றல் நகர் ஆகியவையும் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை மேற்கண்ட 10 கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிப்பவர்களும், அப்பகுதியை விட்டு வெளியே செல்லாத வகையிலும், வெளிநபர்கள் யாரும் அப்பகுதிக்குள் நுழையாதவாறும் தெருக்களின் இருபுறமும் தடுப்பு கட்டைகள் கட்டப்பட்டுள்ளது.

போலீஸ் பாதுகாப்பு

மேலும் வெளிநபர்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் செல்லாதவாறு, ஒவ்வொரு மண்டலங்களிலும் தலா 2 போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அந்தந்த நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகள் சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வீடு வீடாக சென்று வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சுகாதாரத்துறையினர் மூலம் கட்டுப்பாட்டு பகுதிகளில் காய்ச்சல் முகாம்கள் நடத்தி, அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்