கள்ள நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட முயன்ற கும்பகோணம் வாலிபர் கொலை வழக்கில் மீண்டும் கைது தலைமறைவாக இருந்த தம்பியும் பிடிபட்டார்

கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட முயன்ற கும்பகோணம் வாலிபர், கொலை வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார். கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த அவருடைய தம்பியும் போலீசில் பிடிபட்டார்.

Update: 2021-04-13 19:15 GMT
கும்பகோணம்:-

கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட முயன்ற கும்பகோணம் வாலிபர், கொலை வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார். கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த அவருடைய தம்பியும் போலீசில் பிடிபட்டார்.

கள்ள ரூபாய் நோட்டுகளுடன் கைது

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கள்ளுக்கடை சந்து பகுதியை சேர்ந்தவர் கண்ணன்(வயது 34). சம்பவத்தன்று இவர் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள படியூர் சோதனைச்சாவடி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ேபாலீசார் அவருடைய மோட்டார் சைக்கிளை சோதனை செய்தனர். 
இதில் அவருடைய மோட்டார் சைக்கிளில் 1.25 லட்சம் மதிப்பிலான கள்ள ரூபாய் நோட்டுகள் இருந்ததும், அவற்றை அவர் புழக்கத்தில் விட முயன்றதும் தெரியவந்தது. இதுதொடர்பாக காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். 

போலீசார் விசாரணை

பின்னர் அவரை கும்பகோணம் அழைத்து வந்து காங்கேயம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், நாகை மாவட்டம் திருமருகலில் உள்ள உறவினர் வீட்டில் கள்ள ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எந்திரம் மூலம் அச்சிட்டது தெரிய வந்தது. அங்கு இருந்த ஜெராக்ஸ் எந்திரம், கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட 2 ஆயிரம், 500, 200, 100 மதிப்பிலான கள்ள ரூபாய் நோட்டுகளை காங்கேயம் போலீசார் கைப்பற்றினர். இதனிடையே கள்ள ரூபாய் நோட்டு வழக்கில் கைதான கண்ணனுக்கு வேறு குற்ற வழக்குகளில் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

கொலை வழக்கில் தலைமறைவானவர்

விசாரணையில், கும்பகோணத்தில் கடந்த 2016-ம் ஆண்டு கண்ணன் தனது தம்பி சீனிவாசனுடன்(30) சேர்ந்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த வாலிபரை முன்விரோதம் காரணமாக கொலை செய்தது தெரிய வந்தது. 
இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அண்ணனும், தம்பியும் வழக்கு நடக்கும்போதே தலைமறைவானவர்கள் என்பதும் தெரிய வந்தது. இதுதொடர்பாக கண்ணனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டபோது அவருடைய தம்பி சீனிவாசன் நாகை மாவட்டம் திருமருகலில் அவர்களது உறவினர் வீட்டில் பதுங்கி இருக்கும் தகவல் கிடைத்தது. 

தம்பியும் கைது

தகவலின் பேரில் திருமருகலுக்கு விரைந்து சென்ற கும்பகோணம் போலீசார் அங்கு இருந்த சீனிவாசன் பிடித்து கைது செய்தனர். கள்ள ரூபாய் நோட்டு வழக்கில் பிடிபட்ட வாலிபர், 5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் தம்பியுடன் மீண்டும் கைது செய்யப்பட்டது கும்பகோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்