இயற்கை உரங்களை பயன்படுத்தி காய்கனி விளைச்சல் அமோகம்

பொறையாறு அருகே இயற்கை உரங்களை பயன்படுத்தி காய்கனி விளைச்சல் அமோகமாக உள்ளது. இதில் புடலங்காய் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Update: 2021-04-13 18:08 GMT
பொறையாறு;
பொறையாறு அருகே  இயற்கை உரங்களை பயன்படுத்தி காய்கனி விளைச்சல் அமோகமாக உள்ளது. இதில் புடலங்காய் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 
காய்கனி சாகுபடி
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் விவசாயமும், இதற்கு அடுத்தபடியாக மீன்பிடி தொழிலும் முக்கிய தொழிலாக உள்ளது. இப்பகுதி விவசாயிகள் நெல், பருத்தி, உளுந்து, கரும்பு, வாழை, நிலக்கடலை, எள், சோளம், கம்பு, மரவள்ளிக்கிழங்கு, சக்கர வள்ளிக்கிழங்கு, கேழ்வரகு, பீர்க்கங்காய், சுரைக்காய், மிளகாய், கத்திரிக்காய், மூலைக்கீரை, அரைக்கீரை, வெந்தயக்கீரை  ஆகியவற்றை சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது கோடை வெயில் தொடங்கி விட்டதால் காய்கனி செடிகள் வெயிலில் வாடி வதங்கி விடாமல் இருக்க பம்பு செட் மூலம் காலை, மாலை இருவேளையும் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். 
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-  
அறுவடை
எங்களது தோட்டங்களில் வெண்டை கொத்தவரை, பாவை, புடலை, அவரை, பீர்க்கங்காய், சுரைக்காய், மிளகாய், கத்திரிக்காய் உள்ளிட்ட காய்கனி வகைகள் சாகுபடி செய்து உள்ளோம். தற்போது காய்கள், காய்த்து குலுங்குகிறது. புடலங்காய் விளைச்சல் அமோகமாக உள்ளது. 
தற்போது புடலங்காய், பாகற்காய், பீர்க்கங்காய் ஆகியவற்றை தினமும் அறுவடை செய்து வருகிறோம். இதனால் எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. தற்போது வெயில் தொடங்கி விட்டதால் காய்கனிகளை காப்பாற்ற இரு வேளையும் தண்ணீர் பாய்ச்சி வருகிறோம். பூச்சிகள், வண்டுகள், புழுக்கள் மற்றும் புடையான், நெருங்காமல் இருக்க இயற்கை உரங்களை இட்டு வருகிறோம். 
மகசூல் அதிகரிப்பு
இதனால் மகசூல் அதிகமாக உள்ளது. நாங்கள் உற்பத்தி செய்த காய்களை சாலை ஓரங்களில் சிறு கடைகள் அமைத்து, நாங்களே விற்பனை செய்து வருகிறோம். இவற்றை  மோட்டார் சைக்கிள், வேன், கார்களில் செல்லும் பொது மக்களும், சுற்றுலாப் பயணிகளும் வாங்கிச் செல்கிறார்கள்.  இயற்கை உரங்களில் விளைந்த காய்கனி என்பதால் நாங்கள் உற்பத்தி செய்த காய்கனிகளை பக்கத்து கிராம மக்களும்  தேடி வந்து வாங்கிச் செல்கிறார்கள். இதனால் எங்களுக்கு லாபம் கிடைக்கிறது. வாரந்தோறும் திங்கட்கிழமை நடக்கும் பொறையாறு வாரச்சந்தையில் காய்களை விற்பனைக்காக கொண்டு செல்வோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்