அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி

பொள்ளாச்சியில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2021-04-13 17:36 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கொரோனா தடுப்பூசி

பொள்ளாச்சி பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்கு மட்டும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டன. 

இதையடுத்து சப்-கலெக்டர் வைத்திநாதன் தடுப்பூசி போடுவதற்கு சிறப்பு முகாம் நடத்துவதற்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் மேற்பார்வையில் பொள்ளாச்சியில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது. 

சி.டி.சி. மேட்டில் உள்ள அலுவலகத்திற்கு டாக்டர், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் நேரடியாக சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர். 

 இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

120 பேருக்கு போடப்பட்டது 

பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் வியாபாரிகளுக்கும், கூட்செட் ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை ஊழியர்களுக்கு சேர்த்து 116 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. 

இதை தொடர்ந்து அரசு போக்குவரத்து கழகம் கிளை-1 ல் பணிபுரியும் ஊழியர்கள் 120 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. 

வியாழக்கிழமை கிளை-2 ல் பணிபுரியும் ஊழியர்களுக்கும், அதை தொடர்ந்து கிளை-3 ல் பணிபுரியும் ஊழியர்களுக்கும் தடுப்பூசி போடப்படும். 

மேலும் 45 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் வடுகபாளையம் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

 தற்போது தொற்று பாதிப்பு அதிகரிப்பதால் பொதுமக்கள் ஆர்வமுடன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்