முறைகேடு நடந்ததாக புகார்: திண்டிவனம் சிறைச்சாலையில் அதிகாரி ஆய்வு தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால் பரபரப்பு

திண்டிவனம் சிறைச்சாலையில் அதிகாாி ஆய்வின் போது தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-04-13 17:09 GMT
திண்டிவனம்,

திண்டிவனம் நேரு வீதியில் கிளை சிறை சாலை உள்ளது. இங்கு 29 விசாரணை கைதிகள் மற்றும் நிபந்தனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு உதவி கிளை சிறை அலுவலராக சுந்தர்பால் என்பவர் உள்ளார்.

இந்த நிலையில், சிறை கைதிகளுக்கு வழங்கப்பட்ட உணவு பொருட்களில் போலியான பில்களை தயார் செய்து முறைகேடுகள் நடந்து வருவதாக  சிறைத்துறை மேலதிகாரிகளுக்கு புகார்கள் சென்றது.

 இதையடுத்து, நேற்று மாலை  கடலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் நிகிலா நாகேந்திரன், திண்டிவனம் கிளை சிறைச்சாலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 5 மணிநேரம் ஆய்வு நடைபெற்றது. 

இந்த நிலையில்,  கிளைச்சிறையின் உதவி சிறை அலுவலர் சுந்தர்பால் நேற்று முன்தினம் முதல் மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார். இதனால், செஞ்சி கிளை சிறையின் உதவி சிறை அலுவலர் முருகானந்தம் கூடுதல் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.

 இதற்கிடையே, ஆய்வு தொடங்குவதற்கு முன்பாக, சிறையில் முதல் நிலை தலைமை காவலராக உள்ள துர்கா பிரசாத்தை கண்காணிப்பாளர் நிகிலா நாகேந்திரன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகள்