வால்பாறையில் 2 வது நாளாக இடி மின்னலுடன் கனமழை
வால்பாறையில் 2-வது நாளாக இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
வால்பாறை
வால்பாறையில் 2-வது நாளாக இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
வெயிலின் தாக்கம்
வால்பாறையில் கடந்த பிப்ரவரி மாதம் இறுதி வாரத்தில் இருந்து கடும் வெயில் இருந்தது. இந்த மாத முதல் வாரத்தில் இங்கு வெயிலின் அளவு 95 டிகிரி பாரான்ஹிட்டாக இருந்தது. இதனால் இங்குள்ள பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.
நீரோடைகள், ஆறுகள், அணைகளில் தண்ணீர் குறைந்ததால் தேயிலை தோட்டங்களில் உள்ள தேயிலை செடிகள் கருக தொடங்கியது. வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்தது.
இடி-மின்னலுடன் கனமழை
இந்த நிலையில் சாரல் மழை பெய்ததுடன், சில இடங்களில் கனமழையும் கொட்டி தீர்த்தது. இதன் தொடர்ச்சியாக 2-வது நாளாக பிற்பகல் 2.30 மணியில் இருந்து மாலை 4 மணி வரை இடி-மின்னலுடன் கனமழை பெய்தது.
இந்த மழை காரணமாக சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இங்குள்ள மார்க்கெட்டில் உள்ள நடைபாதை படிக்கெட்டுகளில் மழைநீர் பாய்ந்து சென்றது.
இதனால் இங்கு நிலவி வந்த வெப்பம் தணிந்து குளிர் நிலவுகிறது. மேலும் மழை காரணமாக நடைபாதை வியாபாரம் பாதிக்கப்பட்டது. நடைபாதை வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் பிளாஸ்டிக் கவர்களால் தங்கள் தள்ளுவண்டி கடைகளை கட்டி வைத்தனர்.
சுற்றுலா பயணிகள்
இதன் காரணமாக இங்கு சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்து விட்டது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் கூழாங்கல் ஆற்றில் குட்டைபோன்று தேங்கி கிடக்கும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.
தற்போது கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.