நிலக்கோட்டை அருகே போலீசாருக்கு ‘டிமிக்கி’ கொடுத்துவிட்டு டிராக்டருடன் தப்பியோடிய 4 பேர் கைது
நிலக்கோட்டை அருகே ஆற்றில் மணல் அள்ளிக்கொண்டு போலீசாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு டிராக்டரில் தப்பியோடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே உள்ள விளாம்பட்டியை சேர்ந்தவர்கள் காசி, ராஜசேகர், செல்வராஜன், சிலம்பரசன். இவர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள வைகை ஆற்றில் டிராக்டரில் மணல் அள்ளி கொண்டிருந்தனர். இதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக விளாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார், மணல் அள்ளிய 4 பேரையும் பிடித்தனர்.
பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்ல போலீசார் முடிவு செய்தனர். இதையடுத்து பிடிபட்ட 4 பேரையும் முன்னால் செல்லுமாறு கூறிவிட்டு, அவர்களை பின்தொடர்ந்து போலீசார் சென்றனர். இதற்கிடையே விளாம்பட்டி போலீஸ் நிலையம் அருகில் வந்தபோது, காசி உள்பட 4 பேரும் வேறு பாதையில் டிராக்டரை திருப்பி, போலீசாருக்கு ‘டிமிக்கி’ கொடுத்துவிட்டு தப்பினர். இதையடுத்து போலீசார் அவர்களை தேடினர்.
இந்தநிலையில் விளாம்பட்டியில் பதுங்கியிருந்த காசி, ராஜசேகர், செல்வராஜன், சிலம்பரசன் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.