குடும்ப பிரச்சினை காரணமாக செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற விவசாயி. தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
செங்கம் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற விவசாயியை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
செங்கம்
தற்கொலை முயற்சி
செங்கம் அருகே உள்ள தண்டம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 45). விவசாயி. இவர் குடும்ப பிரச்சினை காரணமாக சில மாதங்களாக மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று தண்டம்பட்டு பகுதியில் உள்ள செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இது குறித்து அப்பகுதியில் உள்ளவர்கள் மேல்செங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
அங்கு செல்போன் கோபுரத்தில் இருந்த ராஜாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர் கீழே இறங்க மறுத்துவிட்டார். அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் செல்போன் கோபுரத்தில் ஏரி ராஜாவை பத்திரமாக மீட்டு கீழே கொண்டு வந்தனர். மேலும் போலீசார் ராஜாவிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.