நிலக்கடலை அறுவடை தீவிரம்
உடுமலை பகுதியில் நிலக்கடலை அறுவடை தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில் போதிய மகசூல் இல்லாததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
போடிப்பட்டி
உடுமலை பகுதியில் நிலக்கடலை அறுவடை தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில் போதிய மகசூல் இல்லாததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
ஆட்கள் பற்றாக்குறை
தமிழகம் முழுவதும் அதிக அளவில் நிலக்கடலை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எண்ணெய் வித்துப்பயிர்களில் முக்கியமானதான நிலக்கடலையில் 47 சதவீதம் முதல் 53 சதவீதம் வரை எண்ணெய் சத்தும் 26 சதவீதம் புரதச்சத்தும் அடங்கியுள்ளது. இது எண்ணெய் உற்பத்திக்காக மட்டுமல்லாமல் முக்கிய உணவுப்பண்டமாகவும் பயன்பாட்டில் உள்ளது.இதனால் நிலக்கடலைக்கான தேவை அதிகம் உள்ளதால் போதிய விலை கிடைத்து வருகிறது.உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மானாவாரியிலும் இறவையிலும் நிலக்கடலை சாகுபடி மேற்கொண்டு வருகிறார்கள்.தற்போது இந்த பகுதிகளில் தற்போது நிலக்கடலை அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது
நிலக்கடலை சாகுபடியைப் பொறுத்தவரை விதைப்பு, களை எடுத்தல், மண் அணைத்தல், காய் பிரித்தல், உடைத்தல் என அதிக அளவில் கூலி ஆட்கள் தேவை உள்ளது. தற்போது இந்த பகுதிகளில் கூலி ஆட்கள் தட்டுப்பாடு அதிக அளவில் உள்ளது. எனவே நிலக்கடலை பயிரிடுவதில் விவசாயிகளுக்கு தயக்கம் உள்ளது.
நவீன எந்திரங்கள்
ஒரு ஏக்கரில் அறுவடை செய்யப்பட்ட நிலக்கடலைகளிலிருந்து பருப்புகளை கை மூலம் உடைத்து எடுப்பதற்கு 10 ஆட்கள் 2 நாட்கள் வேலை செய்ய வேண்டும். ஆனால் நவீன ரக கருவி மூலம் சுமார் 40 நிமிடங்களில் பருப்புகளை உடைத்து எடுக்க முடியும். அதுபோல ஒரு ஏக்கரில் விதைப்பு செய்வதற்கு 12 ஆட்கள் 8 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்.இதற்கு 50 கிலோ விதைகள் தேவைப்படும். ஆனால் நவீன விதைப்புக் கருவி மூலம் விதைப்பு மேற்கொள்ளும்போது 40 நிமிடங்களில் விதைப்பு மேற்கொள்ள முடியும். இதற்கு 40 கிலோ விதைகள் போதுமானதாக இருக்கும். இவ்வாறு எந்திரங்களை பயன்படுத்துவதன் மூலம் ஆட்கள் பற்றாக்குறைக்கு தீர்வு கிடைப்பதுடன் செலவும் குறையும்.
எனவே நிலக்கடலை சாகுபடியில் நவீன ரக எந்திரங்களை வேளாண் பொறியியல் துறை மூலம் வழங்கி நிலக்கடலை சாகுபடியை ஊக்கப்படுத்தலாம். தற்போது இந்த பகுதியில் நாட்டு ரக நிலக்கடலை சாகுபடி செய்துள்ளோம். இது வறட்சியைத்தாங்கி வளர்வதுடன் நல்ல எண்ணெய்ச்சத்து கொண்ட நிலக்கடலை பருப்புகளைத் தரும். அறுவடை செய்யப்பட்ட நிலக்கடலைகளை 5 நாட்கள் வரை வெயிலில் உலர்த்த வேண்டும். அதன்பிறகு காய்களை உடைத்து பருப்புகளை சேகரித்து விற்பனைக்கு அனுப்பி வைக்கிறோம். பல்வேறு காரணங்களால் தற்போது மகசூல் மிகவும் குறைவாகவே உள்ளது. இதனால் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.