பெண் திடீர் சாவு; துக்கம் தாங்காமல் கணவன் தூக்குப்போட்டு தற்கொலை
கலவை அருகே பெண் திடீரென இறந்தார். இதனால் துக்கம் தாங்காமல் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கலவை
கூலித்தொழிலாளி
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகாவில் உள்ள மேல்புதுப்பாக்கம் காலனியை சேர்ந்தவர் செல்வம் (வயது 52). இவருடைய மனைவி உமா (45). இருவரும் மேல்புது பாக்கத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். கூலிவேலை செய்து வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு கணவன்- மனைவி இருவரும் தூங்கிக்கொண்டிருந்தனர். நேற்றுகாலையில் நீண்டநேரமாகியும் உமா எழுந்திருக்க வில்லை. இதனால் செல்வம் எழுப்பிய போதும் அவர் எழவில்லை. அப்போது அவர் தூக்கத்திலேயே இறந்திருப்பது தெரியவந்தது.
பெண் சாவு; கண்வன் தற்கொலை
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து உறவினர்களுக்கு தெரிவித்தார். உறவினர்கள் வந்து உமாவின் உடலை பார்த்து அழுது கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் மனைவி இறந்ததால்துக்கம் தாங்க முடியாத செல்வம் அருகில் உள்ள ஒரு கொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் உறவினர்கள் மேலும் அதிர்ச்சியடைந்தனர்.
செல்வம், உமா ஆகிய இருவரும் எப்போதும் எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்று வந்துள்ளனர். இந்த நிலையில் அவர்கள் சாவிலும் இணைபிரியாத தம்பதியாகவே இருந்துள்ளனர்.
போலீஸ் விசாரணை
இவர்களுக்கு 2 மகள் உள்ளனர். முதல் மகள் சென்னையில் படித்து வருகிறார். இரண்டாவது மகள் வேலூரில் குரூப்-4 தேர்வுக்கு படித்து வருகின்றார். மகன் மேஸ்திரி வேலை செய்து வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கலவை இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி அங்கு சென்று இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிரு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.