கோவில்பட்டி, சாயர்புரத்தில் முககவசம் அணியாத 113 பேருக்கு அபராதம்

கோவில்பட்டி, சாயர்புரத்தில் முககவசம் அணியாத 113 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2021-04-13 12:04 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டி, சாயர்புரம் பகுதியில் முககவசம் அணியாமல் வெளியே சுற்றிய 113 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.
கோவில்பட்டி
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில் முகக் கவசம் அணியாமல் வெளியே வரும் பொதுமக்கள், வணிக நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள், உரிமையாளர் களுக்கு அபராதம் விதிக்க சுகாதார அதிகாரி இளங்கோ தலைமையில் ஒரு குழுவையும், மண்டல துணை தாசில்தார் அறிவழகன், சுகாதார ஆய்வாளர் சுரேஷ் தலைமையில் ஒரு குழுவையும், சப்-இன்ஸ்பெக்டர் வில்சன், சுகாதார ஆய்வாளர் முருகன் தலைமையில் ஒரு குழுவையும் கோவில்பட்டி நகர சபை ஆணையாளர் ராஜாராம் நியமித்துள்ளார்.
இந்த 3 குழுவினரும் கோவில்பட்டி எட்டயபுரம் ரோடு, மெயின் ரோடு, பஸ் நிலையம், மந்தித்தோப்பு ரோடு, பசுவந்தனை ரோடு, மார்க்கெட் ரோடு பகுதிகளில் நடந்து செல்பவர்கள், வாகனங்களில் செல்பவர்கள், பஸ் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதில் முககவசம் அணியாத 88 பேருக்கு தலா ரூ.200 வீதம் 17 ஆயிரத்து 600 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
சாயர்புரம்
சாயர்புரம் நகர பஞ்சாயத்து பகுதியில் சாயர்புரம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், பெருங்குளம் வருவாய் ஆய்வாளர் சக்கரவர்த்தி, சாயர்புரம் கிராம நிர்வாக அதிகாரி மஞ்சுளா ஆகியோர் சாயர்புரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்கள். அப்போது கார்கள், மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்கள் மற்றும் நடந்து சென்ற பொதுமக்களில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வகையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 25 பேர்க்கு அபராதம் விதிக்கப்பட்டு, அவர்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்