கூவம் ஆற்றில் தவறி விழுந்தவரை மீட்ட தீயணைப்பு படையினர் ‘செல்பி’ ஆசையால் விபரீதம்
எதிர்பாராதவிதமாக மூர்த்தி கால் தவறி நேப்பியர் பாலத்தில் இருந்து கூவம் ஆற்றில் கிழே விழுந்தார்.
சென்னை,
சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 33). இவர் நேற்று அதிகாலை காலை நேப்பியர் பாலம் அருகே நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது அங்கிருந்த அழகான இயற்கை காட்சியுடன் தன்னை ‘செல்பி’ எடுக்க தனது செல்போனை உபயோகித்துள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மூர்த்தி கால் தவறி நேப்பியர் பாலத்தில் இருந்து கூவம் ஆற்றில் கிழே விழுந்தார். அவருக்கு நீச்சல் தெரியாததால் கூவம் ஆற்றில் உயிருக்கு போராடிய நிலையில் கூச்சலிட்டார். கூச்சல் சத்தத்தை கேட்டு அங்கு நடைபயிற்சி மேற்கொண்டவர்கள் உடனடியாக தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
மாவட்ட தீயணைப்பு அதிகாரி சரவணன் தலைமையிலான தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தண்ணீரில் தத்தளித்த மூர்த்தியை மீட்பு கருவிகள் உதவியுடன் மீட்டனர்.