ஈரோடு சம்பத் நகர் உழவர் சந்தை 3 இடங்களில் செயல்பட தொடங்கியது

ஈரோடு சம்பத்நகர் உழவர் சந்தை 3 இடங்களில் செயல்பட தொடங்கியது.

Update: 2021-04-12 22:37 GMT
ஈரோடு
ஈரோடு சம்பத்நகர் உழவர் சந்தை 3 இடங்களில் செயல்பட தொடங்கியது.
உழவர் சந்தை
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, சுகாதார துறையினர் ஒன்றிணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன்படி ஒரே இடத்தில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் ஈரோடு சம்பத் நகர் உழவர் சந்தை 3-ஆக பிரிக்கப்பட்டு செயல்படும் என்று கலெக்டர் கதிரவன் தெரிவித்திருந்தார்.
அதன்படி நேற்று சம்பத் நகர் உழவர் சந்தையின் ஒரு பகுதி சம்பத் நகரிலும், மற்ற 2 பகுதிகள் குமலன்குட்டை மாநகராட்சி தொடக்க பள்ளிக்கூடத்திலும், ஈரோடு பெரியார் நகர் உழவர் சந்தையிலும் செயல்பட தொடங்கியது.
முக கவசம்
குமலன்குட்டை தொடக்க பள்ளிக்கூடத்தில் 40 கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அதில் நேற்று 24 கடைகள் செயல்பட தொடங்கியது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக காய்கறி வாங்க வந்த பொதுமக்களின் இருசக்கர வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
மேலும் காய்கறி வாங்க வந்த பொதுமக்களுக்கு நுழைவாயில் பகுதியில் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, கிருமிநாசினி வழங்கப்பட்டது. முக கவசம் அணியாமல் வந்தவர்கள் சந்தைகளுக்குள் அனுமதிக்கப்படவில்லை. சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் காய்கறி கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன.

மேலும் செய்திகள்