ஓமலூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்

ஓமலூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2021-04-12 21:26 GMT
ஓமலூர்:
ஓமலூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தினார்கள்.
குடிநீர் பிரச்சினை
ஓமலூரை அடுத்த பொட்டியபுரம் ஊராட்சி கட்டிகாரனூர் காலனி பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தநிலையில் இப்பகுதி மக்களுக்கு கடந்த ஒரு வார காலமாக குடிநீர் சரியாக வினியோகம் செய்யப்படவில்லை. மேலும் இங்குள்ள தொட்டியில் குடிநீரை ஏற்றுவது இல்லை எனவும் கூறப்படுகிறது.
குடிநீர் பிரச்சினை குறித்து ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமணி செல்வமணி, ஊராட்சி செயலாளர் தன்ராஜ் ஆகியோரிடம் கூறியும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
சாலைமறியல்
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஓமலூர் - நாலுகால் பாலம் ரோட்டில் கட்டிக்காரனூர் பஸ் நிறுத்தம் அருகே காலிக்குடங்களுடன் அ.தி.மு.க. பிரமுகர் முருகன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் சம்பவ இடத்திற்கு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின்பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் ஓமலூர்- நாலுகால்பாலம் ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்