ஆத்தூர் அருகே சரக்கு வேன் கவிழ்ந்து ரோட்டில் ஆறுபோல் ஓடிய தயிர்
ஆத்தூர் அருகே சரக்கு வேன் கவிழ்ந்து ரோட்டில் ஆறுபோல் தயிர் ஓடியது.
ஆத்தூர்:
தலைவாசல் பகுதியில் இருந்து செந்தில்குமார் என்பவர் 300 லிட்டர் கெட்டுப்போன தயிரை டிரம்களில் ஊற்றி சரக்கு வேனில் ஏற்றிக்கொண்டு ஆத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். பன்றிகளுக்கு உணவாக அளிக்க அதை கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. ஆத்தூர் புறவழிச்சாலை தென்னங்குடிபாளையம் சாலையில் சென்றபோது அந்த வழியாக வந்த லாரி ஒன்று சரக்கு வேன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் நிலைதடுமாறிய சரக்கு வேன் நடுரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்தது. தொடர்ந்து சரக்கு வேனில் இருந்த தயிர் நடுரோட்டில் கவிழ்ந்து ஆறுபோல் ஓடியது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து ஆத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.