விசைத்தறி உரிமையாளரிடம் மும்முனை மின்சார இணைப்புக்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் உள்பட 2 பேர் கைது
தாரமங்கலம் அருகே விசைத்தறி உரிமையாளரிடம் மும்முனை மின்சாரம் இணைப்புக்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் உள்பட 2 பேரை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சேலம்:
தாரமங்கலம் அருகே விசைத்தறி உரிமையாளரிடம் மும்முனை மின்சாரம் இணைப்புக்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் உள்பட 2 பேரை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
ரூ.4 ஆயிரம் லஞ்சம்
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே சின்னப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ். விசைத்தறி உரிமையாளர். இவர், தனக்கு சொந்தமான இடத்தில் புதிதாக விசைத்தறிக்கூடம் அமைத்துள்ளார். அதற்காக தமிழக அரசின் மும்முனை மின்சாரம் இணைப்பு வேண்டி சின்னப்பம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தார். அவரது விண்ணப்பத்தை மின்வாரிய உதவி பொறியாளர் குணசேகரன், வணிக உதவியாளர் ஏழுமலை ஆகியோர் பரிசீலனை செய்தனர். அப்போது, அவர்கள் இருவரும் தங்களுக்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் மும்முனை மின்சாரம் வழங்குவதாக சதீசிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். ஆனால் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க அவருக்கு விருப்பமில்லை.
உதவி பொறியாளர் கைது
இது பற்றி சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து அவர்களது ஆலோசனைபடி நேற்று சதீஷ், ரசாயணம் தடவிய ரூ.4 ஆயிரம் நோட்டுகளுடன் சின்னப்பம்பட்டி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்த உதவி பொறியாளர் குணசேகரன், லஞ்ச பணத்தை அருகில் உள்ள பெட்டிக்கடை உரிமையாளர் வெங்கடாசலத்திடம் கொடுத்துவிட்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இதையடுத்து சதீஷ், சம்பந்தப்பட்ட பெட்டிக்கடையில் ரூ.4 ஆயிரம் லஞ்ச பணத்தை கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் உடனடியாக வெங்கடாசலத்தின் கடைக்கு சென்று அவரை மடக்கி பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், மின்வாரிய உதவி பொறியாளர் குணசேகரன், பணத்தை வாங்கி வைக்குமாறு தெரிவித்ததாக கூறினார். இதையடுத்து மும்முனை மின்சாரம் இணைப்புக்கு லஞ்சம் வாங்கியதாக உதவி பொறியாளர் குணசேகரன் மற்றும் அவருக்கு உதவியதுடன், புரோக்கராக செயல்பட்ட பெட்டிக்கடைக்காரர் வெங்கடாசலம் ஆகிய 2 பேரை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.