வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைப்பு

வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியில் நடமாடும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து உள்ளனர்.

Update: 2021-04-12 21:01 GMT
வால்பாறை

வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியில் நடமாடும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து உள்ளனர். 

சிறுத்தை நடமாட்டம் 

வால்பாறை வாழைத்தோட்டம் குடியிருப்பு பகுதிக்குள் கடந்த சில நாட்களாக அடிக்கடி சிறுத்தை நுழைந்து கோழிகள், நாய் மற்றும் கால்நடைகளை கொன்று வருகிறது. இந்த சிறுத்தை அட்டகாசத்தால் அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர்.

மேலும் இரவு நேரத்தில் வேலை முடிந்து இங்கு வருபவர்களும் அந்த சிறுத்தையை பார்த்து உள்ளனர். அத்துடன் அங்கு இருக்கும் கண்காணிப்பு கேமராக்களிலும் சிறுத்தையின் நடமாட்டம் பதிவாகி உள்ளது. 

கூண்டு வைப்பு 

எனவே குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் அந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வனத்துறையினர் 6 இடங்களில் கேமராக்கள் பொருத்தி கண்காணித்தனர். 

அதில் சிறுத்தை நடமாடுவது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு கூண்டு வைக்க ஆனைமலை புலிகள் காப்பக துணை கள இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் உத்தரவிட்டார். 

அதன்பேரில் உதவி வனபாதுகாவலர் செல்வன் தலைமையில் வனச்சரகர்கள் ஜெயசந்திரன், மணிகண்டன் முன்னிலையில் வனத்துறையினர் வாழைத்தோட்டம் நல்லகாத்து எஸ்டேட் தேயிலை தோட்ட பகுதியில் அந்த சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது.  

தீவிர கண்காணிப்பு 

இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, வாழைத்தோட்டம் குடியிருப்பு பகுதியில் நடமாடும் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம். கூண்டில் சிக்கியதும் அந்த சிறுத்தை அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் என்றனர். 

மேலும் செய்திகள்