தேர்தல் பணியில் ஈடுபட்ட திருச்சி பள்ளி தலைமை ஆசிரியை கொரோனாவுக்கு பலி; உடன் பணியாற்றியவர்கள் கலக்கம்

திருச்சியில் தேர்தல் பணியில் ஈடுபட்ட பள்ளி தலைமை ஆசிரியை கொரோனாவுக்கு பலியானார். இதனால் உடன் பணியாற்றியவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

Update: 2021-04-12 20:23 GMT
தேர்தல் பணியில் ஈடுபட்ட
திருச்சி பள்ளி தலைமை ஆசிரியை  கொரோனாவுக்கு பலி
உடன் பணியாற்றியவர்கள் கலக்கம்
திருச்சி, ஏப்.13-
திருச்சியில் தேர்தல் பணியில் ஈடுபட்ட பள்ளி தலைமை ஆசிரியை கொரோனாவுக்கு பலியானார். இதனால் உடன் பணியாற்றியவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

கொரோனா 2-வது அலை

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதற்கு மத்தியிலும் கடந்த 6-ந்தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. 

வாக்குச்சாவடி பணிகளில் அரசு ஊழியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள் ஈடுபடுத்தப்பட்டனர். திருச்சி மாவட்டத்தில் இப்படி தேர்தல் பணியில் ஈடுபட்ட தலைமை ஆசிரியை ஒருவர் பலியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
தலைமை ஆசிரியை பலி

திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஒரு தொடக்கப் பள்ளியில் 54 வயதுடைய ஒருவர் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் வாக்குச்சாவடியில் அவருடன் பணியாற்றிய சக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கலக்கத்தில் உள்ளனர். பள்ளி தலைமை ஆசிரியை கொரோனாவுக்கு பலியானது எப்படி என்பது பற்றி பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளது.

தேர்தல் பணி

அந்த ஆசிரியை தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பாகவே கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அதனையும் மீறி அவரை தேர்தல் பணியில் ஈடுபடுத்தி உள்ளனர். தேர்தல் நாளன்று ஒரு வாக்குச்சாவடியில் அவர் பணியில் இருந்த போது அவருக்கு கடுமையான காய்ச்சலும், உடல்வலியும் ஏற்படவே சக ஆசிரியைகள் மற்றும் ஊழியர்கள் மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அவரை அங்கிருந்து அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 

அங்கு அவருக்கு பரிசோதனை செய்தபோது கொரோனா இருந்தது உறுதி செய்யப்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அவர் நேற்று இறந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தலைமை ஆசிரியையின் மறைவு அவரது குடும்பத்தில் மட்டுமின்றி கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் வட்டாரத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்