திருட்டு, சங்கிலி பறிப்பு வழக்கில் தொடர்புடைய வாலிபர் கைது
ஜெயங்கொண்டம் பகுதியில் திருட்டு, சங்கிலி பறிப்பு வழக்கில் தொடர்புடைய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஜெயங்கொண்டம்:
திருட்டு- சங்கிலி பறிப்பு
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் கடாரங்கொண்டான் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் உண்டியலை மர்ம நபர் உடைத்து பணத்தை திருடிச்சென்றனர். இதுகுறித்து கோவில் பூசாரி நமச்சிவாயம் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதேபோல் கடந்த மாதம் வாரியங்காவல் கிராமத்தில் முந்திரிக்காட்டில் ஆடு மேய்த்த ரஜேந்திரனின் மனைவி விஜயகுமாரியின் தாலிச்சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்றார். இது குறித்தும் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தனர்.
வாலிபரிடம் விசாரணை
இந்நிலையில் நேற்று ஜெயங்கொண்டம் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி, அதை ஓட்டி வந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், ஜெயங்கொண்டம் அருகே பொன்பரப்பி குடிகாடு கிராமத்தில் உள்ள அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்த நித்தியானந்தம் மகன் தமிழ்பாரதி (வயது 20) என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியதில், அவர் கடாரங்கொண்டான் மாரியம்மன் கோவில் உண்டியல் பணம் திருட்டு மற்றும் வாரியங்காவலில் பெண்ணிடம் சங்கிலி பறிப்பு ஆகியவற்றில் ஈடுபட்டது, தெரியவந்தது.
கைது
இதையடுத்து ஜெயங்கொண்டம் போலீசார் தமிழ்பாரதியை கைது செய்து, அவரிடம் இருந்து தாலிச்சங்கிலி மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வேறு ஏதேனும் திருட்டு மற்றும் குற்ற சம்பவங்களில் அவர் ஈடுபட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.