கபிஸ்தலத்தில் குருணை மருந்தை இரிடியம் என கூறி விற்க முயன்ற 6 பேர் கைது
கபிஸ்தலத்தில் குருணை மருந்தை இரிடியம் என கூறி விற்க முயன்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
கபிஸ்தலம்:-
கபிஸ்தலத்தில் குருணை மருந்தை இரிடியம் என கூறி விற்க முயன்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
மண்டபத்தில் தங்கிய 5 பேர்
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள உமையாள்புரம் வடக்கு பார்வதி தெருவில் வசிப்பவர் ராஜாராம் மகன் கிஷோர் குமார்(வயது 35). இவருடைய நண்பர்கள் கோவையை சேர்ந்த காளிமுத்து(46), பொள்ளாச்சியை சேர்ந்த ஆறுசாமி(55), கரூரை சேர்ந்த சிவகுமார்(40), திருவிடைமருதூரை சேர்ந்த பரமேஷ்குமார்(33), சரவணன்(37).
இவர்கள் 5 பேரும் கபிஸ்தலம் பகுதியில் தங்கி சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கோவில்களை காண வேண்டும் என கிஷோர்குமாரிடம் கேட்டுள்ளனர். அதன்படி கிஷோர்குமார், காளிமுத்து உள்பட 5 பேரும் தங்குவதற்காக கபிஸ்தலம் மெயின் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அறையை ஏற்பாடு செய்துள்ளார்.
போலீசில் புகார்
இதையடுத்து 5 பேரும் கடந்த 5 நாட்களாக திருமண மண்டபத்தில் தங்கி உள்ளனர். இதனிடையே திருமண மண்டபத்தில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சிலர் தங்கி இருப்பதாக கபிஸ்தலம் கிராம நிர்வாக அதிகாரி சிவப்பிரகாசத்துக்கு தகவல் கிடைத்தது.
இதுதொடர்பாக அவர், கபிஸ்தலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இரிடியம் என கூறி விற்க முயற்சி
புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன், சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் திருமண மண்டபத்துக்கு சென்று அங்கு தங்கியிருந்த 5 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் 5 பேரும் தனியார் திருமண மண்டப அறையில் தங்கி இருந்து குருணை மருந்து போன்ற பொருட்களை வைத்துக்கொண்டு அதனை இரிடியம் என கூறி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் விற்பனை செய்ய முயன்றது தெரிய வந்தது.
6 பேர் கைது
அவர்களிடம் இருந்த குருணை மருந்து உள்ளிட்ட பொருட்களை தஞ்சை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், கியூ பிரிவு துணை சூப்பிரண்டு சிவசங்கரன் உள்ளிட்டோர் கைப்பற்றி சோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவை வெடி மருந்து தயாரிக்க பயன்படுத்தும் பொருட்களாக இருக்குமோ? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மண்டபத்தில் தங்கி இருந்த காளிமுத்து உள்பட 5 பேர் மற்றும் அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தந்த கிஷோர்குமார் உள்பட 6 பேரையும் கைது செய்தனர்.