வேடசந்தூர் அருகே கள்ளக்காதலி எரித்து கொலை டிரைவர் கைது

வேடசந்தூர் அருகே கள்ளக்காதலி எரித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-04-12 18:53 GMT
வேடசந்தூர்:

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள கஸ்பா அய்யலூரை சேர்ந்தவர் செந்தில்மணி. டிரைவர். அவருடைய மனைவி ரஞ்சிதா (வயது 26). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 

இந்தநிலையில் கடந்த 29-ந் தேதியன்று மருத்துவமனைக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு ரஞ்சிதா வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து பூசாரிப்பட்டியை சேர்ந்த ரஞ்சிதாவின் தந்தை முருகேசன், வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். 

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சிதாவை தேடி வந்தனர். ரஞ்சிதாவின் செல்போனை துருப்புச்சீட்டாக பயன்படுத்தி விசாரணை முடுக்கி விடப்பட்டது.
  
எரித்துக்கொலை

போலீசார் நடத்திய விசாரணையில், திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள ஆர்.புதுக்கோட்டையை சேர்ந்த ராஜ்குமார் (30) என்பவருடன் ரஞ்சிதா அடிக்கடி செல்போனில் பேசியது தெரியவந்தது. 

டிரைவரான ராஜ்குமாருக்கு, திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் ராஜ்குமாரை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அதாவது ராஜ்குமாருக்கும், ரஞ்சிதாவுக்கும் கள்ளக்காதல் இருந்தது தெரியவந்தது. மேலும் அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் ரஞ்சிதாவை எரித்து கொலை செய்து விட்ட அதிர்ச்சி தகவலை ராஜ்குமார் வெளியிட்டார். இதனையடுத்து ராஜ்குமார் கைது செய்யப்பட்டார்.
 
பரபரப்பு வாக்குமூலம்

கைதான ராஜ்குமார், போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில், எனக்கும், ரஞ்சிதாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்தது. நாங்கள் அடிக்கடி செல்போனில் பேசி வந்தோம். 

கடந்த 29-ந் தேதி ரஞ்சிதாவுடன் வேடசந்தூரை அடுத்த கோலார்பட்டி அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றேன். அங்கு வைத்து எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. 

அப்போது நான் ஏற்கனவே மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ரஞ்சிதாவின் உடலில் ஊற்றி தீ வைத்து எரித்து கொன்று விட்டேன் என்று கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். 

இதையடுத்து ரஞ்சிதா எரித்து கொலை செய்யப்பட்ட பகுதியில் நேற்று போலீசார் தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்