மூலைக்கரைப்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் சாவு

மூலைக்கரைப்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் பலியானார்.

Update: 2021-04-12 18:52 GMT
இட்டமொழி:
மூலைக்கரைப்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் பலியானார்.

கிணற்றில் தவறி விழுந்து

மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள கூந்தன்குளம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெருமாள் என்ற பெரியதம்பி (வயது 39) விவசாயி. இவரது மனைவி நம்பிநாச்சியார் (37). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 
பெருமாளுக்கு சொந்தமான தோட்டம் காடன்குளம் கிராமத்துக்கு அருகே உள்ளது. தினமும் கணவனும், மனைவியும் காலையில் ஆடு, மாடுகளை தோட்டத்துக்கு ஓட்டிச்சென்று விவசாய பணிகளை முடித்துவிட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.

பெருமாள் வேறு இடத்துக்கு விவசாய வேலைக்கு சென்று விட்டாராம். எனவே நம்பிநாச்சியார் மட்டும் ஆடு, மாடுகளை தோட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளார். பின்னர் கிணற்றுக்கு அருகே துணி துவைத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் நம்பி நாச்சியார் தவறி விழுந்துள்ளார்.

பிணமாக மீட்பு

பின்னர் இரவில் வீடு திரும்பாத நம்பிநாச்சியாரை அக்கம்பக்கத்தில் பல இடங்களில் பெருமாள் தேடினார். மீண்டும் தோட்டத்திற்கு சென்று பார்த்த போது, அங்கு துணிகள் மிதந்தது. இதுகுறித்து உடனடியாக நாங்குநேரி தீயணைப்பு நிலையத்துக்கும், வடக்கு விஜயநாராயணம் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி நம்பி நாச்சியாரை பிணமாக மீட்டனர். 

அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் கிணற்றில் தவறி விழுந்து நம்பி நாச்சியார் இறந்தது தெரியவந்தது.

மேலும் செய்திகள்