திண்டுக்கல் அருகே பால் வியாபாரி கொலை வழக்கில் 9 பேர் கைது

திண்டுக்கல் அருகே பால் வியாபாரி கொலை வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2021-04-12 18:26 GMT
குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் அருகே உள்ள பாலமரத்துபட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 50). பால் வியாபாரி.  நேற்று முன்தினம் இரவு இவர் மாலப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டு இருந்தார். அப்போது மர்ம நபர்கள் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டினர். 

இதில் முருகேசன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். 

மேலும் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமார் தலைமையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கணேஷ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

கைது

இந்த தனிப்படை போலீசார் நேற்று சிறுமலை ரோடு மலைமாதா கோவில் பிரிவில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த ஒரு கும்பலை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். 

இதில் அவர்கள் நடுமாலப்பட்டியைச் சேர்ந்த முனீஸ்வரன் (வயது 24), பாலசுப்பிரமணியன் (21), சபரிகிரி (20), ஆத்துபட்டியைச் சேர்ந்த கார்த்திகேயன் (23), மேட்டூர் காலனியை சேர்ந்த தங்கமணி (24), தோட்டனூத்தை சேர்ந்த சந்தனகுமார் (22), வடக்கு மாலபட்டியை சேர்ந்த பிரகாஷ் (20), அன்பரசன் (27), முருகேசன் (48) என்பதும், இவர்கள் முருகேசன் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 9 பேரையும் போலீசார் கைது செய்து தாலுகா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். 

காதல்

இதில் கைதான முனீஸ்வரன் போலீசில் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம் விவரம் வருமாறு- நான் மாலப்பட்டியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்தேன். 

இதற்கு அந்த பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பாலமரத்துபட்டியை சேர்ந்த பால் வியாபாரி முருகேசன் என் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து என்னை கண்டித்தார். 

இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. மேலும் முருகேசன் ஆட்களை வைத்து என்னை தாக்க முயற்சி செய்கிறார் என எண்ணினேன். இதனால் முருகேசனை தீர்த்துக்கட்ட திட்டமிட்டேன். 

அதன்படி நேற்று முன்தினம் பால் வியாபாரி முருகேசன் மாலப்பட்டி பஸ்நிறுத்தம் அருகே வந்தபோது அவரை வழிமறித்து நானும், எனது நண்பர்களும் சேர்ந்து சரமாரியாக வாள்களால் வெட்டினோம். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 

பின்னர் நாங்கள் தப்பிச் செல்ல முயன்றோம். ஆனால் போலீசார் எங்களை பிடித்துவிட்டனர். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து முருகேசனின் கொலைக்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்கள், 3 வாள்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். குற்றவாளிகளை விரைந்து கைது செய்த போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா பாராட்டினார்.

மேலும் செய்திகள்