வாணியம்பாடியில் 2 லாரிகளில் ஆந்திராவுக்கு கடத்திய 40 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

வாணியம்பாடியில் 2 லாரிகளில் ஆந்திராவுக்கு கடத்திய 40 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. லாரி டிரைவர் கைதுசெய்யப்பட்டார்.

Update: 2021-04-12 17:54 GMT
வாணியம்பாடி

வாகன சோதனை

வேலூரில் இருந்து வாணியம்பாடி வழியாக ஆந்திர மாநிலம் குப்பம் பகுதிக்கு அடிக்கடி லாரிகளில் ரேஷன் அரிசி கடத்தி செல்கின்றனர். இதனை தடுக்க வேலூர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

நேற்றுமுன்தினம் இரவு வாணியம்பாடி அடுத்த புத்துக்கோவில் சோதனை சாவடியில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனை நடத்தினர். 

40 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

அப்போது வேலூரில் இருந்து வந்த 2 லாரிகளை மடக்கி சோதனையிட்டனர். அதில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தன. டிரைவர் யோகேந்திரன் என்பவரை போலீசார் மடக்கி பிடித்தனர். மற்றொரு லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார். 

விசாரணையில் வேலூர் மாவட்டத்திலிருந்து ஆந்திர மாநிலம் குப்பம் பகுதிக்கு ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரியவந்தது. 2 லாரிகளிலும் சுமார் 40 டன் ரேஷன் அரிசி இருந்ததாக கூறப்படுகிறது.
அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து வேலூர் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அரிசி கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்