கட்டுப்பாடுகளை தளர்த்தி கலை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்க வேண்டும் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கலைஞர்கள் மனு
கட்டுப்பாடுகளை தளர்த்தி நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் சங்க நிர்வாகிகள் மனு கொடுத்தனர்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்ட நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் நல சங்கம் சார்பில் அதன் மாவட்ட தலைவர் சின்னசாமி, மாவட்ட செயலாளர் வேலன், மாநில துணை தலைவர் சின்னசாமி, மாவட்ட அமைப்பு செயலாளர் முருகசாமி மற்றும் நிர்வாகிகள், நாட்டுப்புற கலைஞர்கள் நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியுள்ளதாவது:-
தமிழகத்தில் பரவி வரும் கொரோனா தொற்றால் ஏற்பட்ட கட்டுப்பாடுகளால் முதலில் பாதிக்கப்பட்ட தொழில் எங்களது கலைத்தொழில் ஆகும். கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளால் எங்களது தொழில் மிகவும் நிலைகுலைந்து போய்விட்டது. ஒரு ஆண்டுக்கு பின்பு கோவில் திருவிழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தும் சூழ்நிலை உருவான போது கொரோனா நோய்த்தொற்று காரணமாக மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
நிவாரணம்
இதனால் எங்களது தொழில் கேள்விக்குறியாகி விட்டது.
இதன் காரணமாக இதனை நம்பி வாழும் நாட்டுப்புற கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வாழ்வாதாரம் இன்றி சிரமப்படும் சூழ்நிலை உருவாகும். எனவே மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடுகளை தளர்த்தி கோவில் திருவிழாக்களில் சமூக இடைவெளியுடன் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும். கட்டுப்பாடுகள் தளர்வு செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் பேரிடர் நிவாரணமாக ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10,000 வழங்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.