செல்போன் வாங்கி தருவதாக கூறி ரூ.39 ஆயிரம் மோசடி உத்தரபிரதேசத்தை சேர்ந்தவருக்கு வலைவீச்சு
நாகையில் செல்போன் வாங்கி தருவதாக கூறி ரூ.39 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக உத்தரபிரதேசத்தை சேர்ந்தவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
நாகப்பட்டினம்,
நாகை கொட்டுபாளையத் தெருவை சேர்ந்தவர் முகமதுநிவாஸ் (வயது 23). இவருக்கும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த முகேஷ்மூர்த்தி என்பவருக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் முகேஷ்மூர்த்தி, குறைந்த விலையில் செல்போன் வாங்கி தருவதாக முகமதுநிவாசிடம் கூறியுள்ளார். இதை நம்பிய முகமதுநிவாஸ் ரூ.39 ஆயிரத்து 500-ஐ முகேஷ்மூர்த்தியின் வங்கி கணக்குக்கு அனுப்பி வைத்தார்.
போலீசில் புகார்
பணம் அனுப்பி 2 நாட்கள் கடந்த பிறகும் செல்போன் கிடைக்கவில்லை. இதனால் முகமதுநிவாஸ், முகேஷ்மூர்த்தியை செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த முகமது நிவாஸ் நாகை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.