45 வயதுக்கு மேற்பட்ட 7 லட்சம் பேர் பயன்பெறுவார்கள்

கடலூர் மாவட்டத்தில் தடுப்பூசி திருவிழா தொடங்கியது. 45 வயதுக்கு மேற்பட்ட 7 லட்சம் பேர் பயன்பெறுவார்கள். 26 குழுவினர் கிராமங்களுக்கு சென்று தடுப்பூசி போடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-04-12 17:04 GMT
கடலூர், 

சீனாவின் வூகான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு உலக நாடுகள் முழுவதும் பரவியது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் லட்சக்கணக்கானோர் மாண்டனர். தமிழகத்திலும் இந்த வைரசால் லட்சக்கணக்கானோர் பாதிப்புக்குள்ளாகினர்.
இதையடுத்து கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் பரவல் குறைய தொடங்கியது. அதன் பிறகு கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஒற்றை இலக்கத்தில் இருந்து வந்தது. இதற்கிடையே கொரோனாவை கட்டுப்படுத்த கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின், கோவிஷீல்டு உள்ளிட்ட தடுப்பூசிகள் டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கும், வயதானவர்களுக்கும் போடும் பணி கடந்த ஜனவரி மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

2-வது அலை

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா 2-வது அலை அதிவேகமாக தாக்கி வருகிறது. இதனால் தினசரி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்தும் வகையில் ஏப்ரல் 11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை தடுப்பூசி திருவிழா நடத்த பிரதமர் மோடி அறிவுறுத்தியிருந்தார்.
அதன்படி கடலூர் மாவட்டத்திலும் தடுப்பூசி திருவிழா நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி சுகாதாரத்துறை ஊழியர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட குழுவினர் கிராமம் கிராமமாக சென்று, 45 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டு வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட சுமார் 7 லட்சம் பேர் பயன் அடைவார்கள்.

தடுப்பூசி திருவிழா

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக மொத்தம் 26 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் சுகாதாரத்துறை ஊழியர்களும், செவிலியர்களும் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவினர் கிராமம் கிராமமாக சென்று, 45 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
இதற்காக மாநில அரசால் வழங்கப்பட்டுள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்களின் விவர பட்டியல், அந்த குழுவினரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அந்த குழுவினர் கிராமங்கள் தோறும் சென்று தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு குழுவினரும் தினசரி குறைந்தபட்சம் 2 மற்றும் அதற்கு மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று தடுப்பூசி போட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைவருக்கும்  தடுப்பூசி 

அதன் மூலம் மாவட்டத்தில் உள்ள 45 வயதுக்கு மேற்பட்ட 7 லட்சம் பேருக்கும், வருகிற 25-ந் தேதிக்குள் தடுப்பூசி போட்டு முடிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அந்த குழுவினர் தடுப்பூசி போடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மேலும் மாவட்டத்தில் தற்போது வரை 12 ஆயிரத்து 970 டோஸ் கோவாக்சின் தடுப்பு மருந்தும், 12 ஆயிரத்து 200 டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்தும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக தடுப்பு மருந்துகள் விரைவில் வர உள்ளது. அதனால் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. அனைவருக்கும் தடையின்றி தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினசரி 3 ஆயிரம் பேர்

இதுதவிர மாவட்டத்தில் உள்ள கடலூர், விருத்தாசலம், சிதம்பரம், வடலூர், பண்ருட்டி உள்ளிட்ட 10 இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள், 71 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 7 தனியார் மருத்துவமனைகள் மூலம் தினசரி 2,500 முதல் 3 ஆயிரம் பேர் வரை தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்த தடுப்பூசி போட்டுக்கொள்வதால் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது. அதனால் பொதுமக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்