கொடுத்த கடனை திருப்பிக்கேட்ட தம்பதி உள்பட 3 பேர் மீது தாக்குதல்

தேனி அருகே கொடுத்த கடனை திருப்பிக்கேட்ட தம்பதி உள்பட 3 பேர் தாக்கப்பட்டனர்.

Update: 2021-04-12 16:48 GMT
தேனி:
தேனி அருகே உள்ள அன்னஞ்சி ராம்சிங் நகரை சேர்ந்த மணி மனைவி கவுசல்யா (வயது 35). இவருடைய உறவினர் அரண்மனைப்புதூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பரத்பாண்டி. இவர் சுற்றுலா வாகனங்கள் வைத்து தொழில் செய்து வருகிறார். 
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொழில் தொடங்குவதற்காக இவர், கவுசல்யாவிடம் கடன் கேட்டுள்ளார். அவர் தனது உறவினர்களிடம் இருந்து கடனாக ரூ.27 லட்சம் வாங்கி, அதை பரத்பாண்டியிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்த பணத்தை பரத்பாண்டி திருப்பிக்கொடுக்காமல் இருந்துள்ளார். 
இதனால் கடந்த 10-ந்தேதி கவுசல்யா, தனது கணவர் மணி, தாய் அமராவதி ஆகியோருடன், தேனி பங்களாமேட்டில் பரத்பாண்டி நடத்திவரும் நிறுவனத்துக்கு சென்று பணத்தை கேட்டார். 
அப்போது பரத்பாண்டியும், அவருடைய உறவினர்களான மணிகண்டன், பவித்ரா, ராஜா ஆகியோரும் சேர்ந்து இரும்பு கம்பியால் அவர்களை தாக்கினர். இதில், கவுசல்யா, மணி, அமராவதி ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர். இதுகுறித்து கவுசல்யா அளித்த புகாரின் பேரில் பரத்பாண்டி, மணிகண்டன், பவித்ரா, ராஜா ஆகிய 4 பேர் மீது தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்