கொரோனா தடுப்பூசி இல்லாததால் அரசு மருத்துவமனை முற்றுகை
கொரோனா தடுப்பூசி இல்லாததால் அரசு மருத்துவமனை முற்றுகை
இடிகரை
கொரோனா தடுப்பூசி இல்லாததால் பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
கொரோனா தடுப்பூசி
கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையத்தில் அரசு மருத்துமனை உள்ளது. இங்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த அரசு மருத்துவமனையில் இதுவரை 6822 பேருக்கு தடுப்பூசி செலுத்தப் பட்டு உள்ளது. பொதுமக்களுக்கு அதிக தடுப்பூசி செலுத்தியதில் இந்த அரசு மருத்துவமனை தமிழகத்திலேயே 5-வது இடம் பிடித்துள்ளது.
எனவே இந்த மருத்துவமனைக்கு கடந்த 10-ந் தேதியில் இருந்து தடுப்பூசி போட வரும் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்தது. இந்த நிலையில் தடுப்பூசி போடுவதற்காக நேற்று காலை 6 மணியளவில் அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் வந்தனர்.
வாக்குவாதம்
ஆனால் அவர்கள் அனைவருக்கும் போட போதுமான தடுப்பூசி இல்லை என்று தெரிகிறது. இது பற்றி அங்கு திரண்டிருந்த பொது மக்களிடம் டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த சிலர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவீந்திரநாதன் மற்றும் போலீசார் மருத்துவமனைக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதை ஏற்க மறுத்து பொதுமக்கள் தொடர்ந்து வாக்குவாதம் செய்தனர்.
தடுப்பூசி போடப்பட்டது
இது குறித்து பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ.விடம் தெரிவிக்கப்பட் டது. உடனே அவர், கோவை மாவட்ட சுகாதார பணிகள் துறை அதி காரிகளிடம் பேசினார்.
இதைத் தொடர்ந்து தாளியூரில் உள்ள பெரியநாயக்கன்பாளையம் வட்டார மருத்துவமனையில் இருந்து 100 டோஸ் பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.
அதன்பிறகு தலைமை டாக்டர் சேரலாதன் மேற்பார்வையில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இது பற்றி டாக்டர் சேரலாதன் கூறும்போது, கூடுதல் தடுப்பூசிகளை வழங்க சுகாதாரத்துறைக்கு தெரிவித்துள்ளோம். விரைவில் போதுமான தடுப்பூசிகள் வர வாய்ப்புள்ளது. அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்றார்.
பொதுமக்கள் ஆர்வம்
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனைக்கு தினமும் 200- க்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட ஆர்வமுடன் வருகின்றனர்.
எனவே இந்த மருத்துவமனைக்கு கூடுதலாக கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இது சம்பந்தமாக கோவை பாராளுமன்ற தொகுதி பி.ஆர்.நடராஜன் எம்.பி. கூறுகையில், பொதுமக்களிடம் தடுப்பூசி போடுவதற்கான ஆர்வம் அதிகரித்துள்ளது. அதற்காக அவர்களை அலைக்கழிப்பது வருத்தம் அளிக்கிறது.
பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனைக்கு தினமும் 1000 டோஸ் தடுப்பூசி வழங்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.