கொரோனா வேகமாக பரவுவதால், பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் கட்டாயம் முக கவசம்அணிய வேண்டும் என்று அரசு முதன்மை செயலாளரும், கண்காணிப்பு அதிகாரியுமான டாக்டர் கோபால் வேண்டுகோள் விடுத்தார்.

கொரோனா வேகமாக பரவுவதால் பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் கட்டாயம் முக கவசம்அணிய வேண்டும் என்று அரசு முதன்மை செயலாளரும் கண்காணிப்பு அதிகாரியுமான டாக்டர் கோபால் வேண்டுகோள் விடுத்தார்.;

Update: 2021-04-12 16:35 GMT
திருப்பூர்
கொரோனா வேகமாக பரவுவதால், பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் கட்டாயம் முக கவசம்அணிய வேண்டும் என்று அரசு முதன்மை செயலாளரும், கண்காணிப்பு அதிகாரியுமான டாக்டர் கோபால் வேண்டுகோள் விடுத்தார். 
கண்காணிப்பு அதிகாரி ஆய்வு
திருப்பூர் மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு கண்காணிப்பு அதிகாரியான கால்நடை பராமரிப்புத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் கோபால் நேற்று திருப்பூரில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த கொரோனா தடுப்பூசி மையம், பழைய பஸ் நிலையம் அருகில் பஸ்சில் பயணம் செய்யும் பயணிகள் முககவசம் அணிந்து அரசின் விதிமுறைகளை கடைபிடிக்கிறார்களா என்பதையும், மாநகராட்சி அருகில் உள்ள தேநீர் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், திருப்பூர் மங்கலம் ரோடு கிரி நகர், பூச்சக்காடு பகுதியில் அமைந்துள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதியையும், அதே பகுதியில் நடைபெற்ற காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாமையும், ஆலாங்காடு பகுதியில் அமைந்துள்ள தனியார் பின்னலாடை நிறுவனம், அவினாசி ரோடு குமார்நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமைக்கப்பட்டு இருந்த கொரோனா தடுப்பூசி மையத்தையும் டாக்டர் கோபால் ஆய்வு செய்தார்.
வழிபாட்டு தலங்கள்
பின்னர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் விஜயகார்த்திகேயன் முன்னிலை வகித்தார். அரசு முதன்மை செயலாளர் டாக்டர் கோபால் தலைமை தாங்கி பேசியதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கோவில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களுக்கு வருபவர்கள் அனைவரும் முககவசம் அணிந்துள்ளார்களா? என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.  
அதுபோல் உழவர் சந்தைகள், காய்கறி மார்க்கெட்டுகள், பேக்கரி, வணிக வளாகங்கள், தொழில் நிறுவனங்கள், டீக்கடைகள், இறைச்சி கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் மட்டுமில்லாமல் கடைக்காரர்கள், வியாபாரிகளும் முககவசம் அணிய வேண்டும். 
அபராதம்
பூ விற்பனை செய்பவர்கள், தள்ளுவண்டிக்கடைக்காரர்கள், ரோட்டோர கடை வியாபாரிகள் ஆகியோரும் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். முககவசம் அணியாதவர்களுக்கு அந்தந்த உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள், போலீசார் ஆகியோர் ஒருங்கிணைந்து அபராத நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தெலுங்கு புத்தாண்டு, தமிழ் புத்தாண்டு, ரம்ஜான் போன்ற பண்டிகை நாட்கள் வர இருப்பதால் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் மக்கள் இருப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும். 
பஸ்களில் அனைவரும் முககவசம் அணிந்து பயணிக்க வேண்டும். முககவசம் அணியாதவர்களை பயணிக்க அனுமதிக்கக்கூடாது. அதுபோல் முககவசம் அணிய வேண்டும். அதுபோல் தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள், தொழிற்பேட்டைகளின் நுழைவுவாசலில் கொரோனா பரிசோதனை நடைபெறும் இடங்கள், கொரோனா தடுப்பூசி போடும் இடங்கள், கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் இடங்கள் ஆகிய விவரங்களை தொழிலாளர்களுக்கு தெரியும் வகையில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.
 முகாம்
மாநகராட்சி பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம்களை அதிகப்படுத்த வேண்டும். குடிசைப்பகுதியில், மக்கள் தொகை நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும். இதுபோல் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.  45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி அவசியம். தொழிற்சாலைகளில் அதிக தொழிலாளர்கள் இருக்கும் இடங்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி அவசியம் போட வேண்டும். போதுமான தடுப்பூசிகள் இருப்பதை உறுதி செய்து முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போட வேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார்.
போலீஸ் கமிஷனர்
இந்த கூட்டத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல், மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ரூபன்சங்கர்ராஜ், தாராபுரம் சப்-கலெக்டர் பவன்குமார், திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர்  சாகுல் அமீது, அரசு மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் வள்ளி, பொது சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பாக்கியலட்சுமி, துணை இயக்குனர் டாக்டர் ஜெகதீஷ்குமார் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்